ஹோலி பண்டிகை தினத்தில் பிரதமர், ஜனாதிபதி இல்லம் மீது தாக்குதல் என மிரட்டல்; என்ஜினீயர் கைது


ஹோலி பண்டிகை தினத்தில் பிரதமர், ஜனாதிபதி இல்லம் மீது தாக்குதல் என மிரட்டல்; என்ஜினீயர் கைது
x

சர்வதேச விமான நிலையங்கள், பிரதமர் மற்றும் ஜனாதிபதி இல்லம் மீது ஹோலி பண்டிகையில் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்த என்ஜினீயர் கைது செய்யப்பட்டு உள்ளார்.



பாட்னா,


உத்தர பிரதேசத்தில் வாரணாசி விமான நிலைய இயக்குனருக்கு சமீபத்தில் கடிதம் ஒன்று வந்தது. அதில், நாட்டில் உள்ள பல்வேறு சர்வதேச விமான நிலையங்கள், பிரதமர் மற்றும் ஜனாதிபதி இல்லங்கள் மீது ஆளில்லா விமானம் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடப்பட்டு இருந்தது.

இதேபோன்று, கயா விமான நிலையம் மீதும் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடப்பட்டு இருந்தது. இந்த தாக்குதல்கள் மார்ச் 8-ந்தேதி (இன்று) ஹோலி பண்டிகை தினத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதனால், கயா விமான நிலையத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.

இதுபற்றிய தகவலை வாரணாசி விமான நிலைய இயக்குனர் பாதுகாப்பு முகமைகளுக்கு தெரிவித்து உள்ளார். இதன்படி, விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது. இதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

பீகாரில் நீர்ப்பாசன துறையில் உதவி என்ஜினீயராக பணியாற்றி வருபவர் வினீத் குமார். இவர் தனது எதிரிகளை பழிவாங்க திட்டமிட்டார். இதன்படி, எதிரிகள் எழுதிய மிரட்டல் கடிதம் போன்று இவரே கடிதங்களை எழுதி அனுப்பி உள்ளார்.

இந்த கடிதங்களில் நாட்டில் உள்ள பல்வேறு சர்வதேச விமான நிலையங்கள், பிரதமர் மற்றும் ஜனாதிபதி இல்லங்கள் மீது ஆளில்லா விமானம் கொண்டு தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடப்பட்டு இருந்தது.

இதுபற்றி விசாரணை நடத்திய போலீசார், கயா நகரின் பெல்தாரி தோலா பகுதியில் வைத்து என்ஜினீயர் வினீத் குமாரை கைது செய்து உள்ளனர். அவரிடம் இருந்து கடிதத்தின் உண்மையான நகலையும் போலீசார் கைப்பற்றினர்.

அவர் குறிப்பிட்டு இருந்த 27 எதிரிகளுக்கும், இந்த கடிதங்களுக்கும் தொடர்பு இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்தது. வினீத் மீது முன்பே 6 வழக்குகள் பதிவாகி இருப்பதும் தெரிய வந்து உள்ளது. இந்த சம்பவத்தில் அவர் மீது எப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டு உள்ளது. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


Next Story