வெறுப்புணர்வு பேச்சுக்கு எதிராக மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஐகோர்ட்டு


வெறுப்புணர்வு பேச்சில் ஈடுபடுவர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென டெல்லி ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

2020-ம் ஆண்டு குடியுரிமை திருச்சட்டம் தொடர்பான போராட்டத்தின்போது பாஜக எம்.பி.க்கள் அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசி, மக்களை வன்முறையில் ஈடுபட தூண்டியதாகவும் இதன் காரணமாக 2 இடங்களில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றதாகவும் 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யும்படி கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த பிரிந்தா கராத் கீழமை கோர்ட்டில் வழக்குத்தொடர்ந்தார். ஆனால், 2 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்ய கீழமை கோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது.

இதனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இந்த விசாரணையில் அனுராக் தாக்கூர், பர்வேஷ் வர்மா இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்ட டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு தெரிவித்துவிட்டது.

அதேவேளை, இந்த வழக்கில் கருத்து தெரிவித்துள்ள டெல்லி ஐகோர்ட்டு நீதிபதி சந்திர தாரி சிங், வெறுப்புணர்வை தூண்டும் வகையில் மதம், ஜானி, பகுதி, இனம் ஆகியவை குறித்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள், அரசியல், மத தலைவர்கள் கருத்து தெரிவிப்பது சகோதரத்துவத்திற்கு எதிரானது.

இவ்வாறு கருத்து தெரிவிக்கும் நபர்கள் அரசியலமைப்பு நெறிகள் மீது புல்டோசர் கொண்டு உடைக்கின்றனர். மேலும், அரசியல் சாசனத்தால் வழங்கப்பட்டுள்ள சமத்துவம் மற்றும் சுதந்திரத்தையும் புல்டோசரால் உடைக்கின்றனர்.

இது அரசியலமைப்புச் சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைக் கடமைகளை அவமதிக்கும் செயலாகும். ஆகையால், இத்தகைய வெறுப்புணர்வு பேச்சில் ஈடுபடும் நபர்கள் மீது மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வெறுப்புணர்வு பேச்சு தாக்குதல்களுக்கான தொடக்கப்புள்ளியாகும். ஒரு இலக்கு சமூகத்திற்கு எதிராக நடத்தப்படும் பாகுபாடு முதல் விலக்கப்படுதல், நாடுகடத்தல் மற்றும் இனப்படுகொலைகளுக்கும் இது தொடக்கப்புள்ளி. தலைவர்கள் வெறுப்புணர்வு பேச்சு, வெறுப்புணர்வு நடவடிக்கையில் ஈடுபடுவது சரியல்ல.

இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் வாக்களித்த மக்களின் தொகுதிகளுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த சமுதாயம் மற்றும் நாடு இறுதியாக அரசியலமைப்பிற்கு பொறுப்புள்ளவர்களாக இருக்க வேண்டும்.

அனைத்து நிலையிலும் வெறுப்புணர்வு பேச்சை கட்டுப்படுத்தவேண்டிய தேவை வந்துள்ளது. அனைத்து சட்டம்-ஒழுங்கு துறைகளும் வெறுப்புணர்வு பேச்சை கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.


Next Story