இதுதான் மத நல்லிணக்கம்..! இறந்து போன இந்து மத ஊழியருக்கு இறுதிச்சடங்கு செய்த இஸ்லாமிய குடும்பம்
நாடு முழுவதும் மத ரீதியிலான பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துகாட்டாக பீகாரில் சம்பவம் நடைபெற்றுள்ளது.
பாட்னா,
பீகாரில் முகம்மது ரிஸ்வான் கான் என்பவர் தனது கடையில் வேலை பார்த்து வந்த இந்து மதத்தை சேர்ந்த முதியவர் உயிரிழந்ததையடுத்து, அவருக்கு இறுதிச்சடங்கு செய்து வைத்த சம்பவம் மத நல்லிணக்கத்திற்கு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. சமூக வலைத்தளங்களில் இது குறித்த காட்சிகள் வைரலான நிலையில், முகம்மது ரிஸ்வான் இச்சம்பவம் குறித்து விளக்கியதாவது;-
நாங்கள் பீகாரில் உள்ளாடைகள் விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறோம். எங்கள் கடைக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக ராம்தேவ் ஷா (வயது 50) என்பவர் வேலைக்கு வந்தார். கடின வேலைகளை தன்னால் செய்ய முடியாவிட்டாலும் கணக்கு வழக்குகளை பார்க்க முடியும் என்று கூறி பணியில் சேர்ந்து சிறப்பாக பணியாற்றி வந்தார். வயது அதிகமானதால் அவரால் முன்பு போல பணியாற்ற முடியவில்லை.
இதையடுத்து, நீங்கள் ஓய்வு எடுத்துக் கொள்ளுங்கள். சம்பளத்தை பற்றி கவலைப்பட வேண்டாம். நான் மாதம் மாதம் சரியாக கொடுத்து விடுகிறேன் என்று உறுதி அளித்தேன். எங்களுக்கு ஒரு பாதுகாவலர் போல அவர் இருந்தார். துரதிருஷ்டவசமாக அவர் இறந்து விடவே அவருக்கு நாங்களே இறுதிச்சடங்கு நடத்தினோம். இந்து மத சடங்குகளை பின்பற்றியே அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. எங்கள் குடும்ப உறுப்பினர்களுடன் சேர்ந்து அவருக்கு இறுதிச்சடங்கை நடத்தினேன்" என்றார்.
ரிஸ்வானிடம் தற்போது நாட்டில் எழுந்துள்ள மத பதற்றம் மற்றும் வன்முறைகள் குறித்து கேள்வி எழுப்பிய போது, " மனிதனின் உண்மையான பண்புகள் இது இல்லை. தொலைக்காட்சியில் காட்டுவது உண்மையை பிரதிபலிப்பதாக இல்லை. ஒரு குழந்தை கீழே விழுந்து காயம் ஏற்பட்டால், உடனடியாக முதலுதவி சிகிச்சையையே செய்வோமே தவிர யாரும் ஜாதி, மதம் குறித்து கேள்வி எழுப்புவது கிடையாது. எங்கள் மத நிகழ்ச்சிகளில் இந்துக்கள் கலந்து கொள்கிறார்கள். இந்துக்களின் நிகழ்ச்சிகளில் நாங்கள் கலந்து கொள்கிறோம்" என்றார்.