ஜனாதிபதியாக நான் தேர்வானது நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனை! பதவியேற்பு விழாவில் புதிய ஜனாதிபதி திரவுபதி முர்மு உரை
ஜனாதிபதியாக நான் தேர்வானது நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனையாகவே பார்க்கப்படும் என அவர் உரையாற்றினார்.
புதுடெல்லி,
நாட்டின் 15-வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு இன்று பதவியேற்றுக்கொண்டார். திரவுபதி முர்முவுக்கு சுப்ரீம்கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
ஜனாதிபதியாக பொறுப்பேற்ற பின் திரவுபதி முர்மு ஆற்றிய உரையில் பேசியதாவது,
ஜனநாயகத்தின் சக்தி இதுதான். ஒரு ஏழை வீட்டில் பிறந்த பெண், இந்தியாவின் மூலைமுடுக்கான பகுதியில் பிறந்த ஒரு ஏழை வீட்டு குழந்தை, நாட்டின் அரசியலமைப்பின் மிக உயரிய பதவியை வகிக்க முடியும் என்பது நிரூபணம் ஆகி உள்ளது. ஜனாதிபதியாக நான் தேர்வானது என்னுடைய சொந்த சாதனை அல்ல, இந்த சாதனை நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு ஏழையின் சாதனையாகவே பார்க்கப்படும்.
நான் ஒடிசா மாநிலத்தில் ஒரு சிறிய பழங்குடியின கிராமத்தில் பிறந்தவள். எனக்கு இந்நாட்டின் ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ஒரு வார்டு கவுன்சிலர் நிலையில் இருந்து இப்போது ஜனாதிபதியாகும் வாய்ப்பு கிடைத்தது. இதுதான் நம் நாட்டின் பெருமை. ஜனநாயகத்தின் தாயாக இந்தியா விளங்குகிறது.
இன்றிலிருந்து இன்னும் சில தினங்களில் நம் நாடு 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது இந்த சூழலில் புதிய ஜனாதிபதியாக நான் பொறுப்பேற்று இருப்பது மகிழ்ச்சி. நம் நாடு 50வது சுதந்திர தினம் கொண்டாடும் போது தான் நான் முதன் முதலாக அரசியல் பயணத்தை ஆரம்பித்தேன். இப்போது 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது இந்த புதிய பொறுப்பு எனக்கு கிடைத்துள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்ததற்கு பின்னர் பிறந்து, இந்நாட்டின் ஜனாதிபதியாகும் முதல் நபர் நான் தான்.
அடுத்த 25 ஆண்டுகள் நாம் நம்முடைய சுதந்திர போராட்ட வீரர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் விதத்தில் செயல்பட வேண்டும். அது இருவழிகளில் செயல்படுத்தப்படும், ஒவ்வொருவருடைய முயற்சி மற்றும் ஒவ்வொருவருடைய கடமை எனக் கருதி நாம் உழைக்க வேண்டும். நாளைய தினம் கார்கில் போரில் வெற்றி பெற்றதன் நினைவு தினம். இந்நாளில் நம் நாட்டு ராணுவத்துக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் உரையாற்றினார்.