உலக மக்களின் மனதை வென்ற திருக்குறள்: பிரதமர் மோடி புகழாரம்


உலக மக்களின் மனதை வென்ற திருக்குறள்: பிரதமர் மோடி புகழாரம்
x

திருவள்ளுவரின் சிலை முன்னால் நிற்பது, ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதாக அமைந்திருந்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.

கன்னியாகுமரி,

3 நாட்கள் தியானம் மேற்கொள்ள, பிரதமர் நரேந்திர மோடி கன்னியாகுமரிக்கு வந்திருந்தார். அங்குள்ள விவேகானந்தர் மண்டபத்தில் தியானம் மேற்கொண்ட அவர் நேற்று திருவள்ளுவர் சிலைக்குச் சென்றார்.

திருவள்ளுவர் சிலையின் பாதத்தில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்திய பிரதமர் மோடி, அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் திருவள்ளுவரைப் பற்றி புகழ்வார்த்தைகளை எழுதி கையெழுத்திட்டார். அந்த வாசகங்கள் வருமாறு:-

மிகப் பெரிய புனிதரான திருவள்ளுவரின் சிலை முன்னால் நிற்பது, ஒரு சிறந்த அனுபவத்தைக் கொடுப்பதாக அமைந்திருந்தது. அவர் இலக்கியம் மற்றும் தத்துவ களங்களில் தலைசிறந்த மேதையாக விளங்கினார். வாழ்க்கை, சமூகக் கடமை மற்றும் நீதிநெறி குறித்து திருக்குறள் தரும் ஆழமான கருத்துகள், உலகளாவிய மக்களின் மனங்களை வென்றதாக அமைந்துள்ளன.

சர்வதேச மற்றும் தேசிய அளவில் நடக்கும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் போதெல்லாம் நான் திருக்குறள்களை எடுத்துக்கூறும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறேன். திருக்குறளின் பல்வேறு மொழிபெயர்ப்புகளை நான் வெளியிட்டு இருக்கிறேன்.

வளர்ச்சி பெற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற நமது குறிக்கோளுக்கு, திருக்குறள்தான் ஊக்கமாக அமைந்தது. உலகளாவிய பிரச்சினைகளுக்கான தெளிவான தீர்வை வழங்குவதில் பெரிதாக பங்காற்றுவதற்கு இந்தியாவையே இன்று உலகம் எதிர்நோக்கி உள்ளது. இந்த சூழ்நிலையில், திருவள்ளுவரின் எக்காலத்திற்கும் உலகளவில் பொருந்தும் அறிவுரைகள், அமைதி, வளர்ச்சி மற்றும் வளத்துடன் கூடிய உலகளாவிய இயக்கத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story