சகோதரத்துவம்-மனிதநேயத்தில் எல்லையற்ற அன்பு, மகிழ்ச்சி இருக்கிறது - ராகுல் காந்தி
சகோதரத்துவம்-மனிதநேயத்தில் எல்லையற்ற அன்பு, மகிழ்ச்சி இருக்கிறது என்று காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூரூ,
கர்நாடகத்தில் காங்கிரஸ் எம்.பியின் ஒற்றுமை பாதயாத்திரை தற்போது நடைபெற்று வருகிறது. பாதயாத்திரையின் நடுவே ராகுல் காந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் சாலை விபத்தில் இறந்த ரக்ஷிதா, வேதா, சஞ்சாரி விஜய் ஆகியோர் தங்களின் உடல் உறுப்புகளை தானம் செய்தனர். அவர்கள் இறக்கும் வயதில் இருக்கவில்லை. வெகு விரைவாகவே நம்மை விட்டு சென்றுவிட்டனர்.
அவர்கள் தங்களின் சாவிலும் உடல் உறுப்புகளை தானம் செய்து தாங்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு அர்த்தத்தை கற்பித்தனர். இதன் மூலம் மற்றவர்களின் உயிரை காப்பாற்றியுள்ளனர். இது அவர்களின் மிக அருமையான தியாகம், அன்பை வெளிக்காட்டுவதாக உள்ளது.
உடல் உறுப்புகளை தானம் செய்த அவர்களின் குடும்பத்தினருடன் இன்று (நேற்று) பாதயாத்திரை மேற்கொள்ளும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது. மற்றவர்களின் நலனில் அக்கறை செலுத்துவது என்பது மனித சமூகத்தின் மனநிலை ஆகும்.
மறைந்த நடிகர்கள் ராஜ்குமார், புனித் ராஜ்குமார் ஆகியோரும் கண்களை தானம் செய்து லட்சக்கணக்கான மக்களுக்கு உத்வேகம் அளித்தனர். அவர்களின் இந்த செயலால் மக்களிடையே உடல் உறுப்புகள் தானம் குறித்த விழிப்புணர்வு அதிகரித்தது. நல்லிணக்கம், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தில் எல்லையற்ற அன்பு, மகிழ்ச்சி இருக்கிறது.
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.