புத்தூரில் பல்பொருள் அங்காடியில் ரூ.2 லட்சம் திருட்டு


புத்தூரில் பல்பொருள் அங்காடியில் ரூ.2 லட்சம் திருட்டு
x
தினத்தந்தி 11 Sept 2023 12:15 AM IST (Updated: 11 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

புத்தூரில் பல்பொருள் அங்காடியில் ரூ.2 லட்சம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊழியரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மங்களூரு-

புத்தூரில் பல்பொருள் அங்காடியில் ரூ.2 லட்சம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பாக ஊழியரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பல்பொருள் அங்காடி

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா கல்லரே பகுதியில் வித்யா மற்றும் மஞ்சுநாத் ஆகியோருக்கு சொந்தமான பல்பொருள் அங்காடி உள்ளது. இங்கு சிலர் ஊழியர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மஞ்சுநாத், ரூ.2.15 லட்சத்தை பல்பொருள் அங்காடியின் கல்லாப்பெட்டியில் வைத்து சென்றார்.

இதையடுத்து நேற்று முன்தினம் அவர் பல்பொருள் அங்காடிக்கு சென்று பார்த்தார். அப்போது கல்லாப்பெட்டியில் இருந்த ரூ.2.15 லட்சம் மாயமாகி இருந்தது. இதுகுறித்து மற்றொரு உரிமையாளரான வித்யாவிடம் மஞ்சுநாத் கேட்டுள்ளார். அப்போது தான் பணத்தை எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.

கண்காணிப்பு கேமரா ஆய்வு

இதுகுறித்து புத்தூர் போலீசில் மஞ்சுநாத் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் பல்பொருள் அங்காடிக்கு வந்து பார்வையிட்டனர். பின்னர் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் அங்கு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். அப்போது மர்மநபர் ஒருவர் கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை எடுப்பது பதிவாகி இருந்தது.

மேலும், அந்த கடையில் வேலை பார்த்து வந்த சேத்தன்குமார் என்ற ஊழியர் மீது போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. ஏனெனில், கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவமும், சேத்தன்குமாரின் உருவமும் ஒன்று போல் இருந்ததாக தெரிகிறது.

ஊழியரிடம் விசாரணை

இதையடுத்து சந்தேகத்தின்பேரில் போலீசார் சேத்தன்குமாரை பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இதுகுறித்து புத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story