கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் வீட்டில் ரூ.55 லட்சம் நகை, பணம் திருட்டு
பெங்களூருவில் கம்ப்யூட்டர் நிறுவன அதிபர் வீட்டில் ரூ.55 லட்சம் மதிப்பிலான நகை, பணம் திருடப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.
பெங்களூரு:
பெங்களூரு அன்னபூர்னேஷ்வரிநகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் பிரசன்னகுமார். இவர், சொந்தமாக கம்ப்யூட்டர் நிறுவனம் நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராகவும் அவர் இருந்து வருகிறார். சமீபத்தில் தான் அவர் புதிய வீட்டை கட்டி குடும்பத்துடன் குடியேறி இருந்தார். சம்பவத்தன்று பிரசன்னகுமார் வழக்கம் போல் நிறுவனத்திற்கு புறப்பட்டு சென்றிருந்தார். அவரது மனைவியும் தனது வீட்டை பூட்டி விட்டு பொருட்கள் வாங்குவதற்காக வெளியே புறப்பட்டு சென்றிருந்தார்.
அந்த சந்தர்ப்பத்தில் வீட்டுக்கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவில் இருந்த தங்க நகைகள், பணத்தை திருடி சென்று விட்டனர். வெளியே சென்றுவிட்டு பிரசன்னகுமாரின் மனைவி வீட்டுக்கு வந்த போது முன்பக்க கதவு உடைக்கப்பட்டும், பீரோவில் இருந்த நகைகள் திருட்டுப்போய் இருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவில் இருந்த 1 கிலோ தங்க நகைகள், ரூ.5½ லட்சம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றிருந்தனர். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.55 லட்சம் ஆகும். இதுகுறித்து அன்னபூர்னேஷ்வரிநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாகி விட்ட மர்மநபர்களை வலைவீசி தேடிவருகிறார்கள்.