சென்னையில் நடந்த ராணுவ தேர்வில் ப்ளூ டூத் பயன்படுத்தி காப்பியடித்த வடமாநில இளைஞர்கள்
ராணுவ குரூப்-சி தேர்வில் ப்ளூ டூத் பயன்படுத்தி காப்பியடித்த அரியானா மாநில இளைஞர்கள் 29 பேரை கைது செய்த போலீசார் அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.
சென்னை,
சென்னை நத்தம்பாக்கத்தில் ராணுவ பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ராணுவ பணிகளுக்கான குரூப்-சி தேர்வு நேற்று நடைபெற்றது. இந்த தேர்வை வட மாநில இளைஞர்கள் உள்ளிட்ட ஆயிரத்து 728 பேர் எழுதினார்கள்.
இந்த தேர்வில் பங்கேற்ற அரியானா மாநில இளைஞர்கள் 28 பேர் சிறிய அளவிலான ப்ளூடூத்தை பயன்படுத்தி முறைகேடாக தேர்வு எழுதியுள்ளனர். இவர்கள் தேர்வு மையத்துக்கு வெளியே இருக்கும் நபர்களின் உதவியுடன் தேர்வு எழுதியது தெரியவந்தது.
மேலும், சஞ்சய் என்பவருக்கு பதில் வினோத் சுக்ரா என்பவர் ஆள்மாறாட்டம் செய்தும் தேர்வு எழுதியுள்ளனார். இதனை தேர்வு நடத்தும் கண்காணிப்பாளர்கள் கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில், முறைகேடாக தேர்வு எழுதிய 29 பேர் மீதும் தேர்வு கண்காணிப்பாளர் போலீசில் புகார் அளித்தார். இது குறித்து விசாரணை நடத்திய நந்தம்பாக்கம் போலீசார் அவர்களை மீது தகவல் தொழில் நுட்ப சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.
மேலும், அவர்கள் கைது செய்த போலீசார், தேர்வு எழுத பயன்படுத்திய ப்ளூடூத் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்தனர். அதன்பின், போலீசார் அவர்களை சொந்த ஜாமீனில் விடுவித்தனர்.