மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே காலாவதி ஆகிவிடும்; முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு


மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே காலாவதி ஆகிவிடும்; முதல்-மந்திரி சித்தராமையா பேச்சு
x
தினத்தந்தி 25 Sept 2023 12:15 AM IST (Updated: 25 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மகளிர் இடஒதுக்கீடு சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே காலாவதி ஆகிவிடும் என்று முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக ராம்மனோகர் லோகியா சமதா வித்யாலயா, கர்நாடக பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் கூட்டமைப்பு, கர்நாடக வஞ்சிக்கப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்பு ஆகியவை சார்பில் மகளிர் இடஒதுக்கீடு குறித்த கருத்தரங்கு பெங்களூருவில் நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டு கருத்தரங்கை தொடங்கி வைத்து பேசியதாவது:-

நாடாளுமன்றம், சட்டசபைகளில் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பா.ஜனதா தீவிரமாக கருதினால், சட்ட மசோதாவில் பல்வேறு தடைகளை வைத்திருக்காது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்ட மசோதா 15 ஆண்டுகளுக்கு மட்டுமே செல்லுபடி ஆகும். மக்கள்தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை நடைபெற்று முடிவடைந்த பிறகே இந்த சட்டம் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளனர்.

அதனால் இந்த சட்டம் அமலுக்கு வர 15 ஆண்டுகள் ஆகும். அதனால் இந்த சட்டம் அமலுக்கு வருவதற்கு முன்பே காலாவதி ஆகிவிடும். இதன் மூலம் மத்திய அரசு பெண்களை ஏமாற்றிவிட்டது. இந்த மசோதாவை நிறைவேற்ற கடவுளே என்னை அனுப்பியுள்ளார் என்று பிரதமர் மோடி பேசினார். ஆனால் பெண்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். பெண்களை ஏமாற்ற மோடியை கடவுள் அனுப்பினாரா?.

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை உருவாக்கியதே காங்கிரஸ் தான். காங்கிரஸ் எப்போதும் பெண்கள் மற்றும் சமூக நீதிக்கு ஆதரவாக உள்ளது. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவில் பிற்படுத்தப்பட்ட சமூக பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த மகளிர் மசோதாவை நான் ஆதரிக்கிறேன். பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

2034-ம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் கூட இந்த மகளிர் சட்டம் அமலுக்கு வராது. சூத்திரர்களை போல் பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது. அரசியல் சாசனத்தால் பெண்களுக்கு கல்வி வாய்ப்பு கிடைத்தது. கல்வியில் பெண்கள் ஆண்களை விட முன்னிலையில் உள்ளனர். மகளிர் சட்டம் மற்றும் சமூக நீதிக்காக பெண்கள் தொடர்ந்து போராட வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story