பிறந்து 6 நாட்களான கைக்குழந்தையுடன் ஆசிரியர் தகுதி தேர்வு எழுத வந்த பெண்
ராய்ச்சூரில் பிறந்து 6 நாட்களான கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுந்த வந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ராய்ச்சூர்: ராய்ச்சூரில் பிறந்து 6 நாட்களான கைக்குழந்தையுடன் பெண் ஒருவர் ஆசிரியர் தகுதி தேர்வு எழுந்த வந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
ஆசிரியர் தகுதி தேர்வு
கர்நாடக மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் உயர் நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு நேற்று மற்றும் நேற்று முன்தினம் நடந்தது. இந்த நிலையில் நேற்று ராய்ச்சூர் நகரில் உள்ள மகளிர் கல்லூரியில் தேர்வு எழுத வந்த பட்டதாரி பெண் ஒருவர், கையில் பிறந்து 6 நாட்களான கை குழந்தையை வைத்திருந்தார். அவரை பார்த்த தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் மற்றும் உடன் தேர்வு எழுத வந்தவர்கள் ஆச்சரியம் அடைந்தனர்.
எப்படி பிறந்து 6 நாட்களே ஆன குழந்தையுடன் தேர்வு எழுத முடிகிறது என்று விசாரித்தனர். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து தேர்வு அறையில் பணியில் இருந்த கண்காணிப்பாளர் ஒருவர் கூறும்போது:-
கைக்குழந்தை.....
அரசு வேலை என்பது தற்போதைய காலக்கட்டத்தில் கிடைக்காத ஒன்று. தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றால் மட்டுமே கிடைக்கும். ஏராளமானவர்கள் ஆர்வத்துடன் வந்து இந்த பட்டதாரி தேர்வுகளை எழுதி செல்கிறார். சிலர் திருமண கோலத்தில், சிலர் கைக்குழந்தையுடன் வந்து தேர்வு எழுதுகின்றனர். அதன்படி நேற்று கொப்பல் மாவட்டம் கரட்டகி தாலுகா கூடூரை சேர்ந்த ஜோதி என்ற பெண் 6 நாள் கை குழந்தையுடன் வந்து தேர்வு எழுதினார்.
இதை பார்க்கும்போது எங்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. ஏற்கனவே அவர் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். இந்நிலையில் திடீரென்று பிரசவம் ஏற்பட்டதால், அதனை பெரிதாக எடுத்து கொள்ளாமல் தேர்வு எழுதவேண்டும் என்ற விடாமுயற்சியுடன் வந்திருப்பதாக கூறினார். இதன்மூலம் அவரின் மன வலிமையை உணர முடிந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.