பைக்கில் ஆயுதங்களுடன் நள்ளிரவில் வந்த கொள்ளையர்கள் உதைத்து, உக்கி போட வைத்த கிராமவாசிகள்
மத்திய பிரதேசத்தில் பைக்கில் ஆயுதங்களுடன் கொள்ளை அடிக்க வந்தவர்களை பிடித்து, உதைத்து, கிராமவாசிகள் உக்கி போட வைத்துள்ளனர்.
தம்னோத்,
மத்திய பிரதேசத்தில் தார் மாவட்டத்தில் தம்னோத் நகரில் குல்ஜாரி கிராமத்தில் கொள்ளை அடிப்பதற்காக கைகளில் ஆயுதங்களுடன் ஆறேழு பேர் நள்ளிரவில் பைக்கில் வந்துள்ளனர்.
இதன்பின் வீடு ஒன்றிற்கு சென்று கொள்ளையடிக்கும் நோக்கில் அவர்கள் கதவை தட்டியுள்ளனர். இதனால், வீட்டில் இருந்தவர்கள் பயந்து போய் கூச்சல் போட்டுள்ளனர்.
அவர்களின் சத்தம் கேட்டு மற்ற கிராமவாசிகள் எழுந்து, கொள்ளையர்களை விரட்டியுள்ளனர். இதில், 4 பேர் பிடிபட்டனர். இந்த கிராமத்தில் அடிக்கடி கொள்ளையர்களின் தாக்குதல் நடக்கிறது என கூறப்படுகிறது.
தினமும் இதே தொல்லையால் பாதிக்கப்பட்ட கிராமவாசிகள் தங்களிடம் சிக்கிய 4 பேரையும், அடித்து, உதைத்து, பொது வெளியிலேயே வைத்து உக்கி போட வைத்துள்ளனர். அதன்பின்பு, அவர்களை காவல் நிலையத்திற்கு இழுத்து சென்று உள்ளனர்.
முதலில், உதவி எண் 100 சரியாக வேலை செய்யாத நிலையில், கிராமவாசிகளிடம் இருந்து எந்த தகவலையும் போலீசாரால் பெற முடியவில்லை என போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.
அதனால், அவர்களால் உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல முடியவில்லை. அதன்பின்னர், இணைப்பு கிடைத்ததும், போலீஸ் படை சம்பவ பகுதிக்கு விரைவாக சென்று கைது நடவடிக்கை எடுத்தது என தம்னோத் காவல் நிலைய உயரதிகாரி ராஜ்குமார் கூறியுள்ளார். 4 கொள்ளையர்களிடம் இருந்து ஆடு ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது என போலீசார் கூறியுள்ளனர்.