காதல் கலப்பு திருமணம் செய்த தம்பதியை ஏற்க கிராமத்தினர் மறுப்பு நீதி கேட்டு தாலுகா அலுவலகத்தில் தஞ்சம்
சித்ரதுர்காவில் கலப்பு திருமணம் செய்த வாய்பேச முடியாத மாற்று திறனாளி தம்பதியை ஏற்க கிராமத்தினர் மறுப்பு தெரிவித்ததால் தாலுகா அலுவலகத்தில் நீதி கேட்டு அவர்கள் தஞ்சமடைந்தனர்.
சித்ரதுர்கா-
சித்ரதுர்காவில் கலப்பு திருமணம் செய்த வாய்பேச முடியாத மாற்று திறனாளி தம்பதியை ஏற்க கிராமத்தினர் மறுப்பு தெரிவித்ததால் தாலுகா அலுவலகத்தில் நீதி கேட்டு அவர்கள் தஞ்சமடைந்தனர்.
கலப்பு திருமணம்
சித்ரதுர்கா மாவட்டம் (தாலுகா) நாயக்கனஹள்ளியை அடுத்த தேவரஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சாவித்திரி (வயது 22). வாய் பேச முடியாதவர். இவர் பெங்களூருவில் உள்ள தனியார் ஆயத்த ஆடை தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். இவருடன் ஆந்திராவை சேர்ந்த மணிகண்டன் என்பவர் வேலை பார்த்து வந்தார். இவரும் வாய் பேச முடியாதவர்.
2 பேரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள். இந்தநிலையில் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 2 பேரும் திருமணம் செய்ய முடிவு செய்தனர். இதை அறிந்த பெற்றோர் இவர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்தநிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6-ந் தேதி 2 பேரும் பெங்களூருவில் வைத்து திருமணம் செய்து கொண்டனர். இதை அறிந்த சாவித்திரியின் பெற்றோர் 2 பேரையும் ஏற்று கொண்டனர். இதையடுத்து 2 பேரையும் சாவித்திரியின் பெற்றோர் நேற்று முன்தினம் தங்கள் கிராமத்திற்கு அழைத்து சென்றனர்.
அப்போது இதனை அறிந்த கிராமத்தினர் மாற்று திறனாளி தம்பதியை ஏற்று கொள்ளவில்லை. வேறு சமூகத்தை சேர்ந்த வாலிபரை கிராமத்திற்குள் அனுமதிக்க முடியாது. எனவே அவர்களை இந்த கிராமத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும் மற்றும் 30 ஆயிரம் அபராதம் செலுத்தவேண்டும் என்று கூறினர்.
தாசில்தாரிடம் முறையீடு
இந்தநிலையில் சித்ரதுர்கா தாலுகா அலுவலகத்தில் மாற்று திறனாளி தம்பதி தஞ்சமடைந்தனர். அப்போது அவர்கள் தேவரஹள்ளி கிராமத்திற்குள் நுழைய நடவடிக்கை எடுக்கவேண்டும். மேலும் கிராமத்திற்குள் நுழைய தடையாக இருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தாசில்தாரிடம் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.
அந்த மனுவை வாங்கிய தாசில்தார் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இந்தநிலையில் 2 பேரும் சித்ரதுர்காவில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் தங்கியுள்ளனர். நேற்று அவர்களை சமூக ஆர்வலர்கள் சிலர் சந்தித்து குறைகளை கேட்டறிந்தனர். அப்போது மாற்று திறனாளி தம்பதியினர், எங்களை கிராமத்திற்குள் விடவில்லை என்றால் நாங்கள் மீண்டும் பெங்களூருவிற்கு செல்வதை தவிர வேறு வழியில்லை என்று கூறினர்.
இதை கேட்ட சமூக ஆர்வலர்கள் மாற்று திறனாளி தம்பதிக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். அதாவது மாற்று திறனாளி தம்பதியை கிராமத்திற்குள் நுழைய அனுமதிக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.