இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் குடியரசு துணை தலைவர் பங்கேற்பு


இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் குடியரசு துணை தலைவர் பங்கேற்பு
x
தினத்தந்தி 3 May 2023 6:33 AM IST (Updated: 3 May 2023 8:36 AM IST)
t-max-icont-min-icon

இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கார் பங்கேற்க உள்ளார்.

புதுடெல்லி,

இங்கிலாந்தில் நீண்ட காலம் ராணியாக இருந்த, ராணி 2-ம் எலிசபெத் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 8-ந்தேதி தனது 96 வயதில் மரணமடைந்தார். இந்த சூழலில் மூன்றாம் சார்லஸ் மன்னரின் முடிசூட்டு விழா, நடப்பு ஆண்டு மே மாதம் 6-ந்தேதி நடைபெறும் என பக்கிங்ஹாம் அரண்மனை உறுதிப்படுத்தியது.

இதில், பாரம்பரிய மரபுப்படி, கையில் செங்கோல், தடி ஆகியவற்றை ஏந்தி மூன்றாம் சார்லஸ் மன்னர் அரியணையில் அமர்வார். பிறகு, மூத்த மதகுருமார்களால் புனிதப்படுத்தப்பட்டு ஆசீர்வதிக்கப்பட்ட பிறகு, மூன்றாம் சார்லஸ் மன்னருக்கு புனித எட்வர்டின் கிரீடம் சூட்டப்படும்.

இதன்பின்னர் பக்கிங்ஹாம் அரண்மனையின் பால்கனியில் இருந்து சார்லஸ் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார். அரசர் மூன்றாம் சார்லசின் முடி சூட்டு விழாவை முன்னிட்டு அவருக்கு கவுரவம் சேர்க்கும் வகையில், மே 8-ந்தேதி வங்கி விடுமுறையாக இருக்கும் என இங்கிலாந்து அரசு முன்பே அறிவித்து உள்ளது.

வெஸ்ட்மின்ஸ்டர் அபே பகுதியில் மே 6-ந்தேதி காலையில் அரசர் மூன்றாம் சார்லசின் முடி சூட்டு விழா நடைபெற உள்ளது. இதில், அவரது மனைவி கமீலாவும் கலந்து கொள்கிறார்.

இந்த முடி சூட்டு விழாவில் ஒவ்வொரு நாட்டை சேர்ந்த முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள அழைப்பு விடப்பட்டு உள்ளது. இதன்படி, இந்திய அரசு சார்பில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கார் இங்கிலாந்து நாட்டுக்கு மே 5 மற்றும் 6 ஆகிய நாட்களில் 2 நாள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இதில், இங்கிலாந்து அரசர் மூன்றாம் சார்லஸ் முடிசூட்டு விழாவில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கார் பங்கேற்க உள்ளார்.

கடந்த 2022-ம் ஆண்டு செப்டம்பர் 17 முதல் 19 வரை இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இந்திய ஜனாதிபதி திரவுபதி முர்மு, அந்நாட்டு ராணி 2-ம் எலிசபெத்தின் இறுதி சடங்கில் பங்கேற்று அவரது இரங்கல்களை தெரிவித்து கொண்டார்.


Next Story