டாக்டர் வீட்டில் வைர நகைகள் திருட்டு
பெங்களூருவில் டாக்டர் வீட்டில் வைர நகைகள் திருடியவரை போலீசார் தேடி வருகின்றனர்.
பெங்களூரு:-
பெங்களூரு சதாசிவாநகர் பகுதியில் வசித்து வருபவர் டாக்டர் ஸ்ரீ. இவர் அந்த பகுதியை சேர்ந்த லலிதா என்ற பெண்ணை, தனது வீட்டில் வேலைக்கு அமர்த்தினார். இந்த நிலையில் கடந்த 11-ந் தேதி ஸ்ரீ, வழக்கம்போல் ஆஸ்பத்திரிக்கு சென்றார். பின்னர் வீட்டிற்கு வந்தபோது, வீட்டில் இருந்த அவரது வைர நகைகள் உள்ளிட்டவை திருடுபோய் இருந்தது. மறுநாள் காலையில் அவர் லலிதாவை தனது வீட்டிற்கு அழைத்தார். அதன்படி லலிதாவும் அவரது வீட்டிற்கு வந்தார். அந்த சமயத்தில் லலிதாவை, ஸ்ரீ தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் லலிதாவுக்கு காயங்கள் ஏற்பட்டன. இதையடுத்து அங்கிருந்து தப்பித்து வந்த லலிதா, கே.சி.ஜெனரல் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் அவர் சதாசிவாநகர் போலீசில் இதுதொடர்பாக புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே தனது வீட்டில் இருந்த வைர நகைகளை லலிதா திருடியதாக கூறி ஸ்ரீ போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். மேலும் திருடப்பட்ட பொருட்கள் குறித்து விசாரித்தனர். இதையடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் டாக்டர் ஸ்ரீ மற்றும் லலிதா ஆகிய 2 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.