தொழில் அதிபரை கடத்திய வாலிபர் கைது


தொழில் அதிபரை கடத்திய வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Aug 2023 12:15 AM IST (Updated: 27 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

மங்களூருவில் தொழில் அதிபரை கடத்திய வழக்கில் வாலிபர் ஒருவரை கைது செய்த போலீசார் பொம்மை துப்பாக்கி மற்றும் செல்போன்களை பறிமுதல் செய்தனர்.

மங்களூரு

தொழில் அதிபர் கடத்தல்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே பாண்டேஷ்வர் அட்டாவரை சேர்ந்தவர் முஜிப் ரகுமான் சயீத். தொழில் அதிபர். கடந்த ஜூலை மாதம் 12-ந் தேதி மர்ம நபர்கள் சிலர் இவரை காருடன் கடத்தி சென்றனர்.

பின்னர் துப்பாக்கி முனையில் அவரை மிரட்டி ரூ.5 லட்சம் கேட்டனர்.அதற்கு முஜிப் ரகுமான் மறுப்பு தெரிவித்ததும், அவரை தாக்கிய மர்ம நபர்கள் செல்போன், கார், ரூ.18 ஆயிரம் ரொக்கம் பறித்தனர்.

பின்னர் முஜிப் ரகுமானை தங்களது காரில் ஏற்றி கொண்டு, கங்கனாடி, பம்புவெல், உஜ்ஜாடி, ஜெப்பினமொகரு ஆகிய இடங்களில் சுற்றினர். பின்னர் முஜிப் ரகுமானின் மனைவியை செல்போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் கணவனை கடத்தியதாக கூறினர்.

மேலும் ரூ.5 லட்சம் எடுத்துவரும்படி கூறினர். இல்லையென்றால், கொலை செய்து விடுவதாக மிரட்டினர். இதற்கு முஜிப் ரகுமானின் மனைவி சம்மதித்தார். இதையடுத்து மர்ம

நபர்கள் முஜிப் ரகுமானின் காரை மறைவான இடத்தில் விட்டுவிட்டு, தங்களது காரில் அவரை அழைத்து சென்றனர்.

தப்பியோடிய மர்ம நபர்கள்

அட்டாவரை அடுத்த ஸ்டர்ராக் சாலையில் முஜிப் ரகுமான் வீட்டின் அருகே மர்ம நபர்கள் வந்து நின்றனர். இதை அறிந்த முஜிப் ரகுமானின் மனைவி தனது குழந்தைகளுடன் மர்ம நபர்களின் காரின் அருகே வந்தார். அப்போது மர்ம நபர்கள் முஜிப் ரகுமானின் மனைவி மற்றும் குழந்தைகளை கடத்த முயன்றதாக கூறப்படுகிறது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் கூச்சலிட்டு அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்தனர். சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததும், மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இந்த சம்பவம் குறித்து மங்களூரு புறநகர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் 2 பேர் முஜிப் ரகுமானை கடத்தியது தெரியவந்தது. இது தொடர்பாக அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அதில் கிடைத்த தகவலின் பேரில் சம்பவத்தன்று இரவு கப்ரிஸ்தான் சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முஜிப் ரகுமானின் காரை போலீசார் மீட்டனர். பின்னர் அந்த காரை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.

வாலிபர் கைது

இந்தநிலையில் நேற்று முன்தினம் கடத்தலில் ஈடுபட்ட நபர்களில் ஒருவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் மங்களூரு பஜார் பகுதியை சோந்தவர் நவ்பால் என்பது தெரியவந்தது. இவர் தனது நண்பரான புச்சா என்பவருடன் சேர்ந்து, இந்த கடத்தலில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதற்காக பொம்மை துப்பாக்கியை பயன்படுத்தியது தெரியவந்தது. அந்த பொம்மை துப்பாக்கி, 2 செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள புச்சாவை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story