செந்தில் பாலாஜி வழக்கை ஆக.1-ந்தேதிக்கு ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்டு
செந்தில் பாலாஜி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கை சுப்ரீம் கோர்ட்டு ஆகஸ்ட்1-ந்தேதிக்கு ஒத்திவைத்தது.
புதுடெல்லி,
செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீது இரண்டாவது நாளாக சுப்ரீம் கோர்ட்டில் விசாரணை நடைபெற்று வந்தது.
இதில், செந்தில் பாலாஜி தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் பல வாதங்களை முன்வைத்தார். குறிப்பாக, அமலாக்கத்துறைக்கு கைதுசெய்ய அதிகாரம் இல்லை என்றும், சுப்ரீம் கோர்ட்டு, இதற்கு முன்பு வழங்கிய பல்வேறு தீர்ப்புகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சட்டவிரோத தடுப்பு சட்டம், பிரிவு 19ன் கீழ் அமலாக்கத்துறை அதிகாரிகளுக்கு கைது செய்வதற்கு அதிகாரம் இருக்கிறது தானே என சுட்டிக்காட்டினர். மேலும், ஒருவரை கைதுசெய்வது என்பது, அவரிடமிருந்து ஆதாரங்களையும், தகவல்களையும் பெறவேண்டும் என்பதற்காக தான். அத்தகைய கைதை தண்டனையாக பார்க்கக்கூடாது எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
தொடர்ந்து காரசாரமான வாதங்கள் நடைபெற்ற நிலையில், வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 1-ந்தேதி மதியம் 12 மணிக்கு ஒத்திவைப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், ஆகஸ்ட் 1-ந்தேதி வழக்கு மீண்டும் விசாரணைக்கு வரும்போது, இரு தரப்பும் ஒரு மணி நேரத்திற்குள் வாதங்களை முடிக்கவேண்டும் எனவும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.