கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பு..!
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பட்டுள்ளது.
மைசூரு,
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை மீண்டும் வேகமெடுக்க தொடங்கி உள்ளது. இதனால் மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை கொட்டி வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், அணைகளுக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இதேபோல், குடகு மற்றும் கேரள மாநிலம் வயநாட்டில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணைக்கும், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணைக்கும் நீர்வரத்து அதிகரித்து உள்ளது.
கே.ஆர்.எஸ். அணை மற்றும் கபினி அணை என இரண்டு அணைகளும் முழு கொள்ளவை எட்டியுள்ளன. இரு அணைகளுக்கும் நீர் வரத்தானது ஒரு லட்சத்து 10 கன அடியாக உள்ளது. இந்த நிலையில் கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு நீர் திறப்பு மீண்டும் அதிகரிப்பட்டுள்ளது.
இரு அணைகளில் இருந்தும் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கனஅடி நீர் நேரடியாக தமிழகத்திற்கு காவிரி கால்வாய் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் அணைகளுக்கு நீர் வரத்தானது அதிகமாக உள்ளது. எனவே நீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.