தக்காளி விலை மீண்டும் கிடுகிடு உயர்வு: பெங்களூருவில் கிலோ ரூ.160-க்கு விற்பனை


தக்காளி விலை மீண்டும் கிடுகிடு உயர்வு: பெங்களூருவில் கிலோ ரூ.160-க்கு விற்பனை
x

பெங்களூருவில் தக்காளி விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.160-க்கு விற்பனை ஆகிறது.

பெங்களூரு:

தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் முதல் வாரத்தில் பெய்யத்தொடங்கும். ஆனால் இந்த முறை எதிர்பார்க்கப்பட்ட அளவுக்கு மழை பெய்யவில்லை. இதனால் தக்காளி உள்பட காய்கறி சாகுபடி வெகுவாக குறைந்தது. சந்தைக்கு அவற்றின் வரத்து குறைந்ததால், தக்காளி உள்ளிட்ட காய்கறி விலை விண்ணை தொடும் அளவுக்கு உயர்ந்தது. கிலோ தக்காளி ரூ.200 வரை அதிகரித்தது.

அதன் பிறகு கடந்த மாதம் (ஜூலை) முதல் தென்மேற்கு பருவமழை பெய்யத்தொடங்கியது. நாட்கள் செல்ல செல்ல மழை தீவிரம் அடைந்ததால், தக்காளி விலை சரிய தொடங்கியது. கடந்த வாரம் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.80 வரை விற்பனையானது. கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அதே விலையில் தக்காளி விற்பனையாகி வந்தது. இந்த நிலையில் தென்மேற்கு பருவமழை அதிகம் பெய்ததால், தக்காளி செடிகள் சேதம் அடைந்து அதன் உற்பத்தி குறைந்துவிட்டது.

இதனால் சந்தைகளுக்கு தக்காளி வரத்து குறைந்ததை அடுத்து அவற்றின் விலை மீண்டும் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. பெங்களூருவில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தக்காளி விலை ரூ.120 ஆக இருந்தது. நேற்று முன்தினம் அது ரூ.140 ஆக அதிகரித்தது. நேற்று மேலும்

ரூ.20 அதிகரித்து ஒரு கிலோ தக்காளி ரூ.160-க்கு விற்பனை செய்யப்பட்டது. இப்படி நாளுக்கு நாள் தக்காளி விலை தொடர்ந்து அதிகரிக்க தொடங்கியுள்ளது.

இதனால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தக்காளி இல்லாமல் சாம்பார் வைக்க முடியாது. அதனால் சந்தைக்கு வரும் மக்கள் புலம்பியபடியே கால் கிலோ, அரை கிலோ என்று தக்காளி வாங்கிச் செல்கிறார்கள். இந்த தக்காளி விலையை குறைக்க மத்திய-மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இன்னும் ஒரு மாத காலத்திற்கு தக்காளி விலை ரூ.100-க்கு கீழ் குறையாது என்று சந்தையில் வியாபாரிகள் கூறுகிறார்கள்.

தக்காளி விலை உயா்வால் பொதுமக்கள் பாதிப்பு அடைந்தாலும், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பல பகுதிகளில் தக்காளி சாகுபடி செய்யும் விவசாயிகள் கோடீசுவரர்கள் ஆகிவிட்டனர்.


Next Story