பிரதமரின் 'காசநோய் இல்லாத இந்தியா' திட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார்


பிரதமரின் காசநோய் இல்லாத இந்தியா திட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு தொடங்கி வைத்தார்
x

பிரதமரின் ‘காசநோய் இல்லாத இந்தியா’ திட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.

புதுடெல்லி:

டெல்லியில் கடந்த 2018 மார்ச் மாதம் நடைபெற்ற காசநோய் ஒழிப்பு உச்சிமாநாட்டின் போது 2025-ம் ஆண்டிற்குள் காசநோயை முற்றிலுமாக ஒழிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கூறினார். இந்நிலையில் இந்த இலக்கை எட்டுவதற்கு 'காசநோய் இல்லாத இந்தியா' எனும் திட்டத்தை ஜனாதிபதி திரவுபதி முர்மு இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.

அதிக இறப்பு

இந்நிகழ்வில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பேசியதாவது,

பிரதமரின் 'காசநோய் இல்லாத இந்தியா' திட்டத்திற்கு இந்திய குடிமக்கள் அனைவரும் அதிக அளவில் முன்னுரிமை அளித்து பேரியக்கமாக மாற்ற வேண்டும். நம் நாட்டில் காசநோய் மூலமே அதிக இறப்பு எண்ணிக்கை உள்ளது. உலக மக்கள் தொகையில் இந்தியாவின் பங்கு 20 சதவீதம். ஆனால் உலக அளவில் காசநோய்க்கு 25 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிரதமரின் 'காசநோய் இல்லாத இந்தியா' திட்டத்தின் கீழ், வரும் 2025 ஆம் ஆண்டிற்குள் இந்தியாவில் இருந்து காசநோயை முற்றிலுமாக அகற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இலக்கு 2025

நீடித்த வளர்ச்சியின் கீழ் 2030 ஆம் ஆண்டிற்குள் அனைத்து நாடுகளும் காசநோயை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபை இலக்கு நிர்ணயித்தது. ஆனால் மத்திய அரசின் சிறந்த செயல்பாடுகளினால் வரும் 2025 ஆண்டிற்குள் காசநோய் முற்றிலுமாக அகற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

காசநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது கட்டாயமாகும். இந்நோய் தாக்கத்திற்கு முன்பாகவே காப்பதும் சாத்தியம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். காசநோய்க்கான மருத்துவம் சிறப்பான முறையிலும், எளிதில் அணுகக்கூடிய வகையிலும் உள்ளது.

காசநோய் ஒழிப்பு

இந்நோயிலிருந்து மக்களை காப்பதற்கும், இலவசமாக மருத்துவ வசதி அளிப்பதற்கும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நோய் குறித்து சிலருக்கு தவறான கண்ணோட்டம் உள்ளது. இது முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும்.

காசநோயை ஏற்படுத்தும் கிருமிகள் அனைவரின் உடலிலும் உள்ளது. ஒருவருக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும் போது காசநோய் தாக்கம் ஏற்பட்டு விடுகிறது. சிகிச்சை அளிப்பதன் மூலம் இந்நோயிலிருந்து முழுவதுமாக குணமடைய முடியும். எனவே 'காசநோயை முற்றிலுமாக ஒழிப்பதற்கான முயற்சியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்' என்று ஜனாதிபதி திரவுபதி முர்மு கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா, மத்திய சுகாதாரத்துறை இணைமந்திரி டாக்டர் பாரதி பிரவீன் பவார் மற்றும் ஆளுநர்களும், அரசு உயரதிகாரிகளும் கலந்து கொண்டனர்.


Next Story