பிரதமரின் சாலை பேரணி அரசியல் உள்நோக்கம் கொண்டது; காங்கிரஸ் குற்றச்சாட்டு


பிரதமரின் சாலை பேரணி அரசியல் உள்நோக்கம் கொண்டது; காங்கிரஸ் குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 26 Aug 2023 10:47 AM IST (Updated: 26 Aug 2023 11:09 AM IST)
t-max-icont-min-icon

இஸ்ரோ விஞ்ஞானிகளை காண பிரதமர் பேரணியாக சாலையில் சென்றது அரசியல் உள்நோக்கம் கொண்டது என காங்கிரஸ் குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

புனே,

நிலவின் தென் துருவ பகுதியை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-3 விண்கலம் கடந்த ஜூலை 14-ந்தேதி அனுப்பப்பட்டது. அதன் லேண்டர் நிலவில் கடந்த 23-ந்தேதி மாலை 6.04 மணியளவில் தரையிறங்கியது. பின்னர், அதில் இருந்து ரோவர் வெளியே வந்து ஆய்வு பணிகளை தொடங்கி உள்ளது. லேண்டரில் உள்ள அனைத்து ஆய்வு கருவிகளும் செயல்பட தொடங்கியுள்ளன. தொடர்ந்து, அறிவியல் ஆய்வு பணிகளும் தொடங்கி உள்ளன என இஸ்ரோ அறிவித்தது.

சந்திரயான்-3 விண்கலம் நிலவில் தரையிறங்கும்போது, தென்ஆப்பிரிக்காவில் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் இருந்த பிரதமர் மோடி, இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாராட்டுகளை தெரிவித்து கொண்டார். அதன் தலைவர் சோம்நாத் உடன் தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு வாழ்த்தும் கூறினார்.

இந்த நிலையில், தென் ஆப்பிரிக்கா மற்றும் கிரீஸ் ஆகிய நாடுகளில் மேற்கொண்ட சுற்றுப்பயணம் முடிந்து நாடு திரும்பியதும் நேராக இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திப்பதற்காக பிரதமர் மோடி இன்று காலை பெங்களூருவுக்கு சென்றார். அவருடைய வருகையை முன்னிட்டு பெங்களூரு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

அவரை காண கட்சியினர், மக்கள் கூடியிருந்தனர். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரதமர் மோடி கூடியிருந்த மக்கள் முன் பேசும்போது, விண்கல வெற்றியின்போது, நான் வெளிநாட்டு பயணத்தில் இருந்தேன். அதனால் என்னால், விஞ்ஞானிகளை உடனடியாக சந்திக்க முடியவில்லை.

அதனால்தான் நாடு திரும்பிய உடனே, பெங்களூருவுக்கு வருகை தந்திருக்கிறேன். விஞ்ஞானிகளை சந்திக்க வருகிறேன். அதனால், முதல்-மந்திரி மற்றும் துணை முதல்-மந்திரியை வரவேண்டாம் என கூறினேன். நான் பெங்களூருவுக்கு வரும்போது, முறைப்படி அரசு நடைமுறைகளை பின்பற்றினால் போதும் என கூறினேன் என்று பேசினார்.

இதன்பின், பெங்களூருவில் இருந்து இஸ்ரோ விஞ்ஞானிகளை சந்திக்க காரில் புறப்பட்டார். அப்போது, திரண்டிருந்த மக்களை நோக்கி காரில் நின்றபடியே பிரதமர் மோடி கையசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். தொடர்ந்து, இஸ்ரோ சென்ற அவரை தலைவர் சோம்நாத் மற்றும் பிற விஞ்ஞானிகள் நேரில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். அவர்களை பிரதமர் மோடி பாராட்டினார். இதன்பின்பு, விண்கலம் செயல்பாட்டு பணிகளை பற்றி பிரதமர் மோடிக்கு இஸ்ரோ தலைவர் சோம்நாத் விளக்கி கூறினார்.

இந்நிலையில், மராட்டிய சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான காங்கிரசை சேர்ந்த விஜய் வடத்திவார் கூறும்போது, விஞ்ஞானிகளை பார்ப்பதற்காக பிரதமர் சென்றார். விஞ்ஞானிகளை பற்றி நாங்கள் பெருமை கொள்கிறோம்.

ஆனால், அவர் ஏன் சாலை ஊர்வலம் செல்கிறார்? இந்த திட்டம் வெற்றி பெற உழைத்த விஞ்ஞானிகளுடன் அவர் பேரணியாக சாலையில் சென்றால், அது பெருமைக்குரிய ஒரு விசயம்.

ஆனால் அப்படியில்லாமல், இஸ்ரோ விஞ்ஞானிகளை காண பிரதமர் சாலையில் பேரணியாக சென்றது அரசியல் உள்நோக்கம் கொண்டது என்று குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.


Next Story