கர்நாடக மக்கள், பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய வேண்டும்; டி.கே.சிவக்குமார் வேண்டுகோள்
கர்நாடக மக்கள், பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய வேண்டும் என்று டி.கே.சிவக்குமார் தெரிவித்தார்.
பெங்களூரு:
கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கூட்டு தலைமை
உள்துறை மந்திரி அமித்ஷா 2 நாட்கள் கர்நாடகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது அவர், கர்நாடகத்தில் ஆட்சியின் செயல்பாடுகள் சரி இல்லை, பா.ஜனதா தலைமை பொறுப்பை ஏற்றுக்கொள்ள யாரும் தயாராக இல்லை, தற்போதுள்ள நிர்வாகிகள் தலைமையில் தேர்தலை எதிர்கொண்டால் வெற்றி பெற முடியாது, அதனால் பிரதமர் மோடியின் தலைமையில் தேர்தலை எதிர்கொள்வோம் என்று கூறியுள்ளார். இதற்காக அவரை நாங்கள் பாராட்டுகிறோம். காங்கிரஸ் கட்சி கூட்டு தலைமையின் கீழ் சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும். இந்த கூட்டு தலைமையை தோற்கடிக்க முடியாது என்று கருதி பிரதமரின் பெயரை பா.ஜனதா பயன்படுத்துகிறது. கர்நாடகத்தில் கடந்த 3 ஆண்டுகால எடியூரப்பா, பசவராஜ் பொம்மையின் ஆட்சி முற்றிலும் தோல்வி அடைந்துள்ளது என்பதற்கு அமித்ஷாவின் கருத்தே சாட்சி.
குழப்பத்தில் இல்லை
கர்நாடகத்தில் பால் கூட்டமைப்புகளை விவசாயிகள் வளர்த்து வருகின்றனர். இந்த நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது. நமது விவசாயிகளை பொருளாதார ரீதியாக பலம் மிக்கவர்களாக வளர்க்க வேண்டும். அதனால் நந்தினியை வேறு மாநில நிறுவனத்துடன் இணைக்க கூடாது. நாங்கள் பா.ஜனதாவை போல் குழப்பத்தில் இல்லை. பசவராஜ் பொம்மை தலைமையில் தேர்தலை எதிர்கொள்வதாக, அமித்ஷா முன்பு கூறினார். இப்போது அந்த நிலை மாறி பிரதமர் மோடி பெயரை முன்வைத்துள்ளனர்.
பா.ஜனதா ஆட்சியின் மோசமான செயல்பாடுகளை மக்கள் பார்த்துள்ளனர். அதனால் காங்கிரஸ் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். பா.ஜனதாவினர் மக்களின் உணர்வுகள் அடிப்படையில் அரசியல் செய்கிறார்கள். நாங்கள் மக்களின் வாழ்க்கையை முன்வைத்து அரசியல் செய்கிறோம். உணர்வுகள் மற்றும் வாழ்க்கை இடையே வேறுபாடு உள்ளது. கர்நாடக மக்கள் பா.ஜனதா ஆட்சியை தூக்கி எறிய வேண்டும். மக்கள் மாற்றத்தை தருவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.