அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசிய கொடி ஏற்ற வேண்டும்-கர்நாடக அரசு உத்தரவு
சுதந்திர தின பவள விழாவையொட்டி அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசிய கொடி ஏற்ற கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு: சுதந்திர தின பவள விழாவையொட்டி அனைத்து மாணவர்களின் வீடுகளிலும் ஒரு வாரத்திற்கு தேசிய கொடி ஏற்ற கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
சுதந்திர தின பவள விழா
இந்தியா சுதந்திரம் அடைந்து வருகிற ஆகஸ்டு 15-ந்தேதியுடன் 75-வது ஆண்டு ஆகிறது. இதையொட்டி இந்த ஆண்டு சுதந்திர தின பவள விழாவை கோலாகலமாக கொண்டாட மத்திய அரசும், மாநில அரசுகளும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில், சுதந்திர தின பவள விழாவையொட்டி கர்நாடக உயர்கல்வி துறை மந்திரி அஸ்வத் நாராயண் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும், கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்வித் துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களுக்கும் சுற்றறிக்கை ஒன்று அனுப்பியுள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
அனைவர் வீடுகளிலும் தேசிய கொடி
75-வது சுதந்திர தினத்தை அனைத்து தரப்பு மக்களும் உற்சாகமாக கொண்டாடும் வகையில் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு செய்ய உத்தரவிட்டுள்ளது. அதன்படி 75-வது சுதந்திர தின விழாவை சிறப்பிக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகள் உள்பட அனைத்து கல்வி நிறுவனங்களில் படித்து வரும் மாணவ-மாணவிகள் அனைவரின் வீடுகளிலும் ஆகஸ்டு 11 முதல் 17-ந் தேதி வரை மூவர்ண தேசியக் கொடியை ஏற்ற வேண்டும்.
மேலும் மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்களின் கீழ் வரும் அனைத்து கல்லூரிகள் மற்றும் நிறுவனங்கள் மற்றும் டி.சி.டி.இ.யின் கீழ் உள்ள அரசு, உதவி பெறும், உதவிபெறாத கல்லூரிகள், டிப்ளமோ கல்லூரிகள் நமது தேசியகொடியை ஏற்றி தங்கள் தேசிய பெருமையை வெளிப்படுத்த வேண்டும்.
இதுகுறித்து மாணவ-மாணவிகளுக்கு தெரியப்படுத்தவும், அந்தந்த கல்வி நிர்வாகங்கள், அறிவிப்பு பலகையில் தகவல்களை வெளியிட வேண்டும்.
வாகனங்களில் தேசிய கொடி
மேலும், கல்லூரி நிர்வாகங்கள் தங்கள் வாகனங்களில் தேசிய கொடியை ஏற்றுமாறு டிரைவர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும். இது தொடர்பாக மாணவர்கள், ஊழியர்களுக்கு வழங்கும் அறிவுரைகள், சுதந்திர தின பவள விழா ஏற்பாடுகள் தொடர்பான தகவல்களை கன்னடம் மற்றும் கலாசாரத் துறையின் இணையதளத்தில் வாரந்தோறும் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும். அந்தந்த நிறுவனங்களின் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் தங்கள் வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு ஊக்கமளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.