அரசு-தனியார் வாகன பதிவு எண் பலகையில் பெயர்களை உடனே நீக்க வேண்டும்- கர்நாடக அரசு உத்தரவு
கர்நாடகத்தில் அரசு-தனியார் வாகன பதிவு எண் பலகையில் பெயர்களை உடனே நீக்க வேண்டும் என்று கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக அரசின் தலைமை செயலாளர் ரவிக்குமார் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
சட்டப்படி நடவடிக்கை
கர்நாடகத்தில் அரசு-தனியார் வாகனங்களின் பதிவு எண் பலகையில் பதிவு எண் மட்டுமே எழுதி இருக்க வேண்டும். அத்துடன் சங்கங்கள்-அமைப்புகளின் பெயர்கள் எழுதப்பட்டு இருப்பதாகவும், அது சட்டவிரோதம் என்றும் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, பதிவு எண் பலகையில் பதிவு எண்ணை தவிர வேறு எந்த பெயர்களும் எழுதி இருக்க கூடாது.
அவ்வாறு அரசு வாகனங்களின் பதிவு எண் பலகையில் ஏதேனும் பெயர்களை எழுதி இருந்தால் அதனை 24-ந் தேதிக்குள் (அதாவது இன்று) நீக்க வேண்டும். அனைத்து துறைகளின் அதிகாரிகளும் பெயர்களை நீக்கிவிட்டதாக 24-ந் தேதிக்குள் (இன்று) தகவல் தெரிவிக்க வேண்டும். தனியார் வாகனங்களில் பதிவு எண் பலகையில் இருக்கும் பெயர்களை நீக்க வேண்டும். ஒருவேளை பெயர்களை நீக்காமல் இருந்தால் போலீசார் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பெயரை நீக்க நடவடிக்கை
அதை சோதனையின்போது போலீசார் கண்டுடிபிடித்தால் அதே இடத்தில் அந்த பெயரை நீக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தனியார் வாகனங்களில் அரசின் முத்திரை மற்றும் அரசு அமைப்புகளின் பெயர்களை பயன்படுத்த சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் இருந்து முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாமல் அரசின் முத்திரைகள் மற்றும் பெயர்களை வாகனங்களில் பயன்படுத்தினாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.