மைசூரு தசரா மலர் கண்காட்சி செப்டம்பர் 26-ந்தேதி தொடங்குகிறது; தோட்டக்கலை துறை அதிகாரி தகவல்


மைசூரு தசரா மலர் கண்காட்சி செப்டம்பர் 26-ந்தேதி தொடங்குகிறது; தோட்டக்கலை துறை அதிகாரி தகவல்
x

மைசூரு தசரா மலர் கண்காட்சி செப்டம்பர் 26-ந் தேதி தொடங்கி 9 நாட்கள் நடக்கிறது. இதில் புனித் ராஜ்குமார் சிலை வடிவமைக்கப்பட உள்ளதாக தோட்டக்கலை துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

மைசூரு;

தசரா மலர் கண்காட்சி

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா அடுத்த மாதம் (செப்டம்பர்) 26-ந்தேதி தொடங்கி அக்டோபர் மாதம் 5-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. இந்த தசரா விழாவையொட்டி மைசூருவில் மலர் கண்காட்சி, இளைஞர் தசரா, விவசாய தசரா, உணவு மேளா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கும்.

இந்த நிலையில் மைசூரு தசரா விழாவையொட்டி நஜர்பாத் குப்பண்ணா பூங்காவில் செப்டம்பர் 26-ந்தேதி மலர் கண்காட்சி தொடங்குகிறது. அன்றைய தினம் முதல் அக்டோபர் 4-ந்தேதி வரை 9 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடக்கிறது. இதுகுறித்து தோட்டக்கலை துறை உதவி இயக்குனர் சுவேதா நிருபர்களிடம் கூறியதாவது:-

புனித் ராஜ்குமார் சிலை

மைசூரு தசரா விழா தொடங்கும் ெசப்டம்பர் 26-ந்தேதி மைசூரு நஜர்பாத்தில் உள்ள குப்பண்ணா பூங்காவில் மலர் கண்காட்சி தொடங்குகிறது. செப்டம்பர் 26-ந்தேதி முதல் அக்டோபர் மாதம் 4-ந்தேதி வரை 9 நாட்கள் இந்த மலர் கண்காட்சி நடக்கிறது.

இந்த மலர் கண்காட்சியில் மறைந்த நடிகர் புனித் ராஜ்குமாரின் உருவ சிலை பூக்களால் வடிவமைக்கப்பட உள்ளது. அத்துடன் 75 ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி மாநிலத்தில் உள்ள வரலாற்று நினைவு சின்னங்களும், சிற்பகலைகளும் வண்ண வண்ண பூக்களால் வடிவமைக்கப்பட உள்ளது.

பொதுமக்களை கவரும் வகையில் இந்த மலர் கண்காட்சி இருக்கும். பொதுமக்கள் தங்கள் வீடுகள், தோட்டங்களில் வளர்த்திருக்கும் பூக்கள், பழங்கள், காய்கறிகளை இந்த கண்காட்சியில் வைக்க அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

சிறந்த தோட்டக்கலைக்கு பரிசு வழங்கப்படும். ரோஜா உள்பட ஏராளமான பூக்களால் பல்வேறு சிற்பங்கள் வடிவமைக்கப்பட உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story