போலீசாரை தாக்கிய விவகாரம்; தெலுங்கானா ஒய்.எஸ்.ஆர். கட்சி தலைவர் சர்மிளாவுக்கு ஜாமீன்
தெலுங்கானாவில் போலீசாரை தாக்கிய விவகாரத்தில், ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரிக்கு ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது.
ஐதராபாத்,
தெலுங்கனாவில் அரசு பணிகளுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பி வரும் டி.எஸ்.பி.எஸ்.சி. தேர்வுகளில் வினாத்தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த விசாரணை குழுவிடம் சில ஆவணங்களை காட்ட ஒய்.எஸ்.ஆர். தெலுங்கானா கட்சியின் தலைவர் மற்றும் ஆந்திர முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரியான ஒய்.எஸ். ஷர்மிளா நேற்று காரில் சென்றார்.
ஆனால், அவரை போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆவேசம் அடைந்த ஷர்மிளா, பெண் போலீசாரை தாக்கினார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை பெண் போலீசார் அழைத்து சென்றனர்.
இந்த நிலையில், நம்பள்ளி கோர்ட்டில் அவரை போலீசார் ஆஜர்படுத்தினர். இதில், சர்மிளாவுக்கு 14 நாட்கள் போலீஸ் காவல் விதித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது. இதனால் அவரை போலீசார் காவலுக்கு கொண்டு சென்றனர்.
சர்மிளாவின் வழக்கறிஞர் இன்று கூறும்போது, இந்த விவகாரத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார். அந்த மனு இன்று காலை விசாரணைக்கு வரும் என்று கூறினார்.
இதன்படி, போலீசாரை தாக்கிய விவகாரத்தில், ஆந்திர முதல் மந்திரி ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரிக்கு நம்பள்ளி கோர்ட்டில் ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. இதனை அக்கட்சி வெளியிட்ட செய்தி தெரிவிக்கின்றது.