கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம்
கோலார் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் தொழிலாளர் நலச் சங்கத்தினர் தங்களின் பல்வேறு அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றும்படி போராட்டம் நடத்தினர்.
கோலார் தங்கவயல்:-
ரூ.31 ஆயிரம் ஊதியம்
கோலாரில் இந்திய தொழிலாளர் நலச் சங்க நிர்வாகிகள் கடந்த சில மாதங்களாக தொழிலாளிகளுக்கு குறைந்த பட்ச ஊதியமாக ரூ.31 ஆயிரம் வழங்கவேண்டும். 12 மணி நேரம் வேலை பார்க்கும்படி கூறியுள்ள உத்தரவை ரத்து செய்யவேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றவேண்டும் என்று மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வருகின்றனர். ஆனால் மாநில அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 9-ந் தேதி கோலார் மாவட்டத்தை சேர்ந்த இந்திய தொழிலாளர் நலச் சங்க நிர்வாகிகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்கள் தர்ணா போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் 10 நாட்களுக்கு மாநில அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் எங்கள் போராட்டம் தொடரும் என்று கூறியிருந்தனர்.
21 அம்ச கோரிக்கை
ஆனால் அரசு சார்பில் எந்த முடிவும் எடுக்கவில்லை. இதனால் மாநில அரசின் அலட்சிய போக்கை கண்டித்து நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய தொழிலாளர் நலச் சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தொழிலாளிகளுக்கு தினமும் 12 மணி நேரம் விதிக்கப்பட்ட வேலை நேரத்தை உடனே திரும்ப பெறவேண்டும். மாத குறைந்த பட்ச ஊதியமாக ரூ.31 ஆயிரம் வழங்கவேண்டும். பெமல் உள்பட பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. தங்கச்சுரங்க நிறுவனத்தை திறக்கவேண்டும் உள்பட 21 அம்ச கோரிக்கைகளை மாநில அரசு உடனே நிறைவேற்றவேண்டும். இல்லை என்றால் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தனர்.
கோரிக்கை மனு
மேலும் இதுகுறித்து கோலார் மாவட்ட கலெக்டர் அலுவலக அதிகாரிகளிடம் மனு அளித்தனர். அதை வாங்கிய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.