காங்கிரசை ஆதரித்த லிங்காயத் சமூகத்தினர்


காங்கிரசை ஆதரித்த லிங்காயத் சமூகத்தினர்
x

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவை கைவிட்டு, காங்கிரஸ் கட்சியை இந்த முறை லிங்காயத் சமூகத்தினர் ஆதரித்துள்ளனர். காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட 51 பேரில், 39 பேர் வெற்றி பெற்றுள்ளனர்.

பெங்களூரு:-

பா.ஜனதாவை கைவிட்ட லிங்காயத்

கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 66 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. இவ்வளவு குறைந்த தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்று பா.ஜனதா தலைவர்கள் பலர் நம்பி இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்த தேர்தலில் பா.ஜனதா தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், அவர்களது வாக்கு வங்கியாக இருந்து வந்த

லிங்காயத் சமூகத்தினர் கைவிட்டது தான் என்று சொல்லப்படுகிறது.

பா.ஜனதா வெற்றி பெற்றால் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த எடியூரப்பாவே பெரும்பாலும் முதல்-மந்திரியாக இருந்துள்ளார். இதுதவிர லிங்காயத் சமூகத்தை சேர்ந்த ஜெகதீஷ் ஷெட்டர் மற்றும் பசவராஜ் பொம்மையும், ஒக்கலிக சமூகத்தை சேர்ந்த சதானந்தகவுடாவும் முதல்-மந்திரியாக இருந்துள்ளனர். இதையடுத்து, இந்த சட்டசபை தேர்தலில் 68 லிங்காயத் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு பா.ஜனதா வாய்ப்பளித்திருந்தது.

வெறும் 18 பேர் மட்டுமே வெற்றி

ஆனால் தேர்தல் முடிவுகள் வெளியான போது வெறும் 18 பேர் மட்டுமே வெற்றி பெற்றிருந்தார்கள். லிங்காயத் சமூகத்தில் போட்டியிட்ட 50 பேர் தோல்வியை தழுவி இருந்தார்கள். அதாவது பா.ஜனதா சார்பில் போட்டியிட்ட லிங்காயத் வேட்பாளர்களுக்கு, அந்த சமூகத்தினர் வாக்களிக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் சார்பில் லிங்காயத் சமூகத்தில் 51 பேருக்கு சீட் கொடுக்கப்பட்டு இருந்தது. அவர்களில் 39 பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.

இதன்மூலம் பா.ஜனதாவின் வாக்கு வங்கியாக இருக்கும் லிங்காயத் சமூகத்தினர், பா.ஜனதாவை கைவிட்டு, காங்கிரசுக்கு முழு ஆதரவு அளித்திருப்பது தெரியவந்துள்ளது. எடியூரப்பாவை முதல்-மந்திரி பதவியில் இருந்து இறக்கியது, பா.ஜனதாவில் அவரை ஓரங்கட்டியது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. முதல்-மந்திரி பதவியை எடியூரப்பா ராஜினாமா செய்த போது கண்ணீர் விட்டதை கூறியே சித்தராமையாவும், டி.கே.சிவக்குமாரும் பிரசாரமும் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.


Next Story