விஞ்ஞானிகளுக்கு நூதன முறையில் வாழ்த்து தெரிவித்த விரிவுரையாளர்
சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்ற நிலையில் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு விரிவுரையாளர் ஒருவர் நூதன முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதாவது, கண்ணாடி துண்டுகளை வாயால் எடுத்து ‘இஸ்ரோ’ என ஒட்டினார்.
கோலார் தங்கவயல்
சந்திரயான்-3
நிலவின் தென்துருவத்தில் ஆய்வு செய்ய இஸ்ரோ சார்பில் கடந்த ஜூலை மாதம் 14-ந்தேதி சந்திரயான்-3 விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி நிலவின் தென்துருவத்தில் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக தரையிறங்கியது.
அதில் இருந்து வெளியான பிரக்யான் ரோவர் வாகனம், நிலவில் ஆய்வு பணியை மேற்கொண்டு வருகிறது.
இந்த நிலையில் சந்திரயான்-3 திட்ட வெற்றிக்கு பல்வேறு தரப்பினரும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இஸ்ரோவின் சாதனையால் உலக நாடுகளின் பார்வை இந்தியா பக்கம் திரும்பி உள்ளது.
நூதன முறையில் வாழ்த்து
இந்த நிலையில் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயலை சேர்ந்த தனியார் கல்லூரி விரிவுரையாளர் ஒருவர் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு நூதன முறையில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தங்கவயல் ராபர்ட்சன்பேட்டையை சேர்ந்தவர் பிரதாப் குமார். தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக உள்ளார். இந்த நிலையில், சந்திரயான்-3 திட்டம் வெற்றி பெற்றதை தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு வித்தியாசமான முறையில் வாழ்த்து தெரிவிக்க அவர் முடிவு செய்தார்.
அதன்படி, ராபர்ட்சன்பேட்டை காந்தி சிலை முன்பு இந்திய தேசிய கொடியை வைத்தார். பின்னர் தெர்மாகோளில் துளையிட்டு அதில், ஒரு தட்டில் கண்ணாடி துண்டுகளை ைவத்து அதனை வாயால் எடுத்து 'இஸ்ரோ' என ஒட்டி அசத்தினார். அவருக்கு அந்தப்பகுதியை சேர்ந்த பலர் பாராட்டு தெரிவித்தனர்.
நாட்டின் சொத்து
இதையடுத்து விரிவுரையாளர் பிரதாப் குமார் கூறுகையில், இன்றைய இளைய தலைமுறையினர் மது, கஞ்சா பழக்கங்களுக்கு அடிமையாகி தவறான பாதையில் செல்கின்றனர். இஸ்ரோவின் சாதனைகளை போல நமது இளைஞர்களும் பல்வேறு சாதனைகளை செய்து நாட்டுக்கு சொத்தாக மாற வேண்டும் என்று வலியுறுத்தி தான் இந்த முயற்சியில் ஈடுபட்டேன் என்றார்.
தட்டில் இருந்த கண்ணாடி துண்டுகளை வாயால் எடுத்து தெர்மாகோளில் பிரதாப் குமார் ஒட்டிய காட்சி.