பா.ஜனதா ஆட்சியில் தான் ஏரிகள் நிரம்பின; சி.டி.ரவி பேச்சு
பா.ஜனதா ஆட்சியில் தான் ஏரிகள் நிரம்பின என்று சி.டி.ரவி பேசினார்.
பெங்களூரு:
பெங்களூரு அருகே தொட்டபள்ளாப்புராவில் நடந்த சாதனை விளக்க மாநாட்டில் பா.ஜனதா தேசிய பொதுச் செயலாளர் சி.டி.ரவி பேசியதாவது:-
கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி காலத்தில் தான் ஏரிகள், குளங்கள், அணைகள் நிரம்பி வருகிறது. எடியூரப்பா, சதானந்தகவுடா முதல்-மந்திரியாக இருந்த போது மாநிலத்தில் அனைத்து ஏரிகளும் நிரம்பியது. தற்போது பசவராஜ் பொம்மை முதல்-மந்திரியாக இருக்கும் போது மாநிலத்தில் மழை பெய்து ஏரிகள், குளங்கள் நிரம்பி உள்ளதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்திற்கு வந்த போது மாநிலத்தில் வறட்சி மட்டுமே இருந்தது. நல்லவர்கள் ஆட்சியில் மட்டுமே ஏரி, குளங்கள் நிரம்பும். பா.ஜனதா ஆட்சிக்கு வர வேண்டுமா?, மாநிலம் வறட்சியால் பாதிக்க காங்கிரஸ் அதிகாரத்திற்கு வர வேண்டுமா? என்பதை மக்களே முடிவு செய்து கொள்ளட்டும். சிக்பள்ளாப்பூர், கோலார் மாவட்டங்களில் பா.ஜனதாவுக்கு தற்போது 2 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே உள்ளனர். சாதனை விளக்க மாநாட்டுக்கு மக்கள் திரண்டு வந்திருப்பதன் மூலம் பா.ஜனதாவுக்கு ஆதரவு அதிகரித்திருக்கிறது. வருகிற சட்டசபை தேர்தலில் இப்பகுதிகளில் பா.ஜனதா 10 தொகுதிகளில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது. மக்கள் பா.ஜனதாவுக்கு ஆதரவு அளிக்க தயாராகி விட்டனர் என்பது இந்த சாதனை விளக்க மாநாட்டின் மூலம் ஊகிக்க முடிகிறது.
இவ்வாறு சி.டி.ரவி பேசினார்.