காசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள மிகப்பெரிய உறவை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது - மத்திய இணை மந்திரி எல்.முருகன்


காசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள மிகப்பெரிய உறவை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது - மத்திய இணை மந்திரி எல்.முருகன்
x

காசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள மிகப்பெரிய உறவை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது என்று மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியுள்ளார்.

வாரணாசி,

உத்தரபிரதேசத்தின் காசிக்கும் (வாரணாசி), தமிழகத்துக்கும் இடையே நீண்டகால பாரம்பரிய, கலாசார தொடர்பு உள்ளது. இதை புதுப்பிக்கும் நோக்கில் வாரணாசியில் ஒரு மாத காலத்துக்கு காசி-தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. மத்திய அரசின் கல்வி அமைச்சகம் ஒருங்கிணைக்கும் இந்த நிகழ்ச்சியை, கலாசாரம், ஜவுளி, ரெயில்வே, சுற்றுலா, உணவு பதப்படுத்துதல், தகவல்-ஒளிபரப்பு உள்ளிட்ட அமைச்சகங்களும், உத்தரபிரதேச அரசும் இணைந்து நடத்துகின்றன.

இந்த நிகழ்ச்சியை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இன்று தொடங்கும் காசி தமிழ் சங்கமம், டிச.19 வரை ஒரு மாதம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த நிகழ்வில் வரவேற்பு உரையாற்றிய மத்திய இணை மந்திரி எல்.முருகன் கூறியதாவது:-

ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற பாரதியாரின் கனவை நிறைவேற்றும் வகையில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. புனித பூமியான வாரணாசியில் தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஒரு சிறப்பான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காசிக்கும் தமிழகத்துக்கும் உள்ள மிகப்பெரிய உறவை காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி பிரதிபலிக்கிறது என தெரிவித்துள்ளார்.

பாண்டிய மன்னன் அதிவீர ராம பாண்டியன் காசிக்கு புனித யாத்திரை மேற்கொண்ட பின்னர், தமிழகத்திற்கு திரும்பி தென்காசியில் பெரிய சிவாலயத்தை நிறுவினார். காசிக்கும், தமிழகத்திற்கும் இடையிலான உறவை காசிக்காண்டம் மூலம் தெரிந்து கொள்ளலாம். பக்தர்கள் காசிக்கும், ராமேஸ்வரத்துக்கும் இடையே ஆன்மீக யாத்திரையை மேற்கொண்டு வருகின்றனர்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் பெயரில் ஒரு இருக்கை அளித்து பிரதமர் மோடி பெருமைப்படுத்தினார். இதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story