கர்நாடக மந்திரி சபை 2 ஆண்டுகளுக்கு பின்பு மாற்றி அமைக்கப்படும்


கர்நாடக மந்திரி சபை 2 ஆண்டுகளுக்கு பின்பு மாற்றி அமைக்கப்படும்
x

கர்நாடகத்தில் 2 ஆண்டு களுக்கு பின்பு மந்திரி சபை மாற்றி அமைக்கப்படும் என்று நாராயணசாமி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.

கோலார் தங்கவயல்:-

காங்கிரஸ் ஆட்சி

கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மை இடங்களை பிடித்து ஆட்சி அமைத்துள்ளது. இதையடுத்து முதல்-மந்திரியாக சித்தராமையா பொறுப்பேற்றார். துணை மந்திரியாக டி.கே.சிவக்குமார் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும் அனைத்து துறைகளுக்கும் மந்திரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தநிலையில் கட்சிக்குள் எம்.எல்.ஏ.க்களுக்கு கருத்துவேறுபாடுகள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இதை யடுத்து முதல்-மந்திரி சித்தராமையா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அழைத்து கடும் எச்சரிக்கை விடுத்தார். இந்தநிலையில் மந்திரி பதவிக்கு சிலர் எதிர்நோக்கி காத்திருப்பதாக கூறப்படுகிறது. அதில் ஒருவர் பங்காருபேட்டை எம்.எல்.ஏ.நாராயணசாமி.

மந்திரி சபை மாற்றம்

இதுகுறித்து பங்காருபேட்டையில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த நாராயணசாமி எம்.எல்.ஏ. கூறியதாவது:-

கர்நாடகத்தில் பெரும்பான்மை பலத்துடன் காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. அப்போது ஒவ்வொரு துறைக்கும் புதிய அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த மந்திரிகளை நியமிக்கும்போது, எம்.எல்.ஏ.க்கள் மத்தியில் புதிய ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் 2 ஆண்டுகளுக்கு பின்பு மீதமுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு மந்திரி பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது.

தற்போது மந்திரிகள் பொறுப்பேற்று 2 மாதங்கள் மட்டுமே நிறைவடைந்துள்ளது. 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்த மந்திரிகளை மாற்றி அமைக்கப்பட வாய்ப்பு உள்ளது. அப்போது எனக்கு மந்திரி பதவி கிடைக்கும்.

குடிநீர் பிரச்சினையை தீர்ப்பேன்

எனக்கு மந்திரி பதவி கிடைத்தால் பங்காருபேட்டை, கோலார் தங்கவயல், மாலூர் ஆகிய தொகுதிகளில் வளர்ச்சி பணிகளை செய்து கொடுப்பேன். குறிப்பாக இந்த தொகுதிகளில் குடிநீர் பிரச்சினை அதிகம் உள்ளது.

அந்த குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். மேலும் புதிய தொழிற்சாலைகளை கொண்டு வந்து இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story