பிரதமர் மோடியை விஷ பாம்பு என கூறிய விவகாரம்; கார்கேவுக்கு பிரசார தடை கோரி தேர்தல் ஆணையத்திற்கு பா.ஜ.க. கடிதம்


பிரதமர் மோடியை விஷ பாம்பு என கூறிய விவகாரம்; கார்கேவுக்கு பிரசார தடை கோரி தேர்தல் ஆணையத்திற்கு பா.ஜ.க. கடிதம்
x

பிரதமர் மோடியை விஷ பாம்பு என கூறிய விவகாரத்தில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரி தேர்தல் ஆணையத்திற்கு பா.ஜ.க. கடிதம் எழுதி உள்ளது.

ஐதராபாத்,

கர்நாடக சட்டசபைக்கு வருகிற மே 10-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவதற்காக ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதாதளம் உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக பணியாற்றி வருகின்றன.

கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு, தீவிர பிரசார பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பேரணி, கட்சி பொது கூட்டம் போன்றவற்றிலும் கலந்து கொண்டு வருகின்றன.

இந்நிலையில், கர்நாடகாவின் கலபுரகியில் நடந்த பொது கூட்டம் ஒன்றில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கலந்து கொண்டு பேசினார். அவர் கூட்டத்தில் பேசும்போது, பிரதமர் மோடி ஒரு விஷ பாம்பு போன்றவர். அது நஞ்சா? அல்லது இல்லையா? என நீங்களே யோசித்து பார்க்கலாம். நீங்கள் அதனை நக்கினால், மரணம் அடைந்து விடுவீர்கள் என்று பேசியது பரபரப்பு ஏற்படுத்தியது.

இதற்கு பா.ஜ.க. தரப்பில் இருந்து கடும் கண்டனம் கிளம்பியது. இதுபற்றி பா.ஜ.க. மூத்த தலைவர் மற்றும் மத்திய மந்திரியான ஷோபா கரந்த்லஜே கூறும்போது, மல்லிகார்ஜூன கார்கே ஒரு மூத்த தலைவர். காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார்.

அவர் இந்த உலகிற்கு என்ன கூற வருகிறார்? பிரதமர் மோடி நமது நாட்டின் பிரதமராக இருக்கிறார். அவரை ஒட்டுமொத்த உலகமும் மதிக்கிறது. இதுபோன்று பேசுவது காங்கிரஸ் எந்த மட்டத்திற்கு கீழ்நோக்கி போயுள்ளது என காட்டுகிறது. அவர் (கார்கே) நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறினார்.

இதுபற்றி கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கூறும்போது, கார்கேவின் மனதில் விஷம் உள்ளது. அரசியல் ரீதியாக பிரதமர் மோடியை எதிர்த்து போராட முடியாத சூழலில், அவர்களது கப்பல் மூழ்கி கொண்டிருக்கிறது என அவர்கள் பார்க்கும்போது, நம்பிக்கையற்றபோது இதுபோன்ற எண்ணங்கள் வருகின்றன. மக்கள் அவர்களுக்கு ஒரு பாடம் புகட்டுவார்கள் என்று கூறினார்.

அவரது இந்த பேச்சுக்கு மல்லிகார்ஜூன கார்கே பின்னர் மன்னிப்பு கோரினார். இந்நிலையில், பிரதமர் மோடியை விஷ பாம்பு என கூறிய விவகாரத்தில் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு பிரசாரம் செய்ய தடை விதிக்க வேண்டும் என கோரி தேர்தல் ஆணையத்திற்கு தெலுங்கானா பா.ஜ.க. சார்பில் கடிதம் எழுதப்பட்டு உள்ளது.

இதுபற்றி தெலுங்கானா பா.ஜ.க. பொறுப்பு வகிக்கும் தருண் சக், தேர்தல் ஆணையத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், கார்கேவின் பேச்சுகள் தேர்தல் நன்னடத்தை விதிகளின் பல்வேறு பிரிவுகளை மீறியுள்ளது.

அதன்படி, ஒருவரின் தனிப்பட்ட வாழ்க்கையை தாக்கும் வகையிலான பேச்சுகளை ஒருவரும் வெளியிட கூடாது. அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள், தனிநபர் வாழ்க்கை பற்றிய அனைத்து விமர்சனங்களில் இருந்தும் விலகி இருக்க வேண்டும். தேர்தல் பிரசாரத்தில் உயரிய நிலைப்பாட்டை கடைப்பிடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளை மீறி உள்ளார். அதனால், தேர்தல் ஆணையம் இதில் தலையிட வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்து உள்ளார்.

இந்திய சமூகத்தில் எவர் ஒருவரையும் விஷ பாம்புடன் ஒப்பிடுவது என்பது, அந்த நபரை ஓர் எதிரியாக, நம்பத்தகாதவராக, விசுவாசமற்றவராக, துரோகியாக மற்றும் மோசடி செய்பவராக காட்டுகிறது.

இந்த விசயத்தில் கார்கே தனிப்பட்ட முறையிலும் மற்றும் அவரது கட்சி மீண்டும், மீண்டும் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டு உள்ளார். சமீபத்தில் கூட பிரதமர் மோடியின் புதைகுழி தோண்டப்பட்டு வருகிறது, நூறு தலை ராவணன் என்று அழைத்ததெல்லாம், பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க.வுக்கு எதிரான தனிப்பட்ட துஷ்பிரயோகம் ஆகும் என்றும் தருண் சக் தெரிவித்து உள்ளார். அவதூறு பிரிவுகளின் கீழ் கார்கே மீது அபராதம் விதிக்கப்படத்தக்கவராகவும் அவரது பேச்சுகள் இருக்கின்றன என்றும் அவர் தெரிவித்து உள்ளார்.


Next Story