மண்டியாவில் காட்டுயானைகள் கூட்டம் தொடர் அட்டகாசம்
மண்டியாவில் அதிகரித்து வரும் காட்டுயானைகள் அட்டகாசம். நிரந்தர தீர்வு காண கிராம மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
மண்டியா:-
10 காட்டுயானைகள்அட்டகாசம்
மண்டியாவில் கடந்த 15 நாட்களாக காட்டுயானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சில நாட்களுக்கு முன்பு சாத்தனூரில் இருந்து ஸ்ரீரங்கப்பட்டணாவிற்கு வந்த 10 காட்டுயானைகள் விளை நிலத்திற்குள் புகுந்து, நெல், கரும்பு பயிர்களை மிதித்து நாசப்படுத்தியது. கிராமங்களுக்குள் புகுந்து பொதுமக்களையும் அச்சுறுத்தி வந்தது.
இதனால் பண்ணைகளில் விவசாயிகள் தங்க முடியாத நிலை ஏற்பட்டது. இரவு நேரங்களில் வரும் இந்த காட்டுயானைகள் கூட்டதால் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்தநிலையில் இதுகுறித்து உன்சூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறை அதிகாரிகள் காட்டுயானைகளை பட்டாசு வெடித்து துரத்தினர்.
மீண்டும் யானைகள் நடமாட்டம்
இந்தநிலையில் நேற்று மத்தூர் பகுதியில் 4 காட்டுயானைகள் அட்டகாசம் செய்துள்ளன. ராம்நகர் மாவட்டம் தெங்கனஹள்ளி வழியாக மண்டியா மாவட்டம் மத்தூருக்கு அந்த யானைகள் வந்தன. மத்தூரில் உள்ள ஆஞ்சநேயசாமி கோவில் அடுத்த சிம்ஷா ஆற்றில் இந்த யானைகள் நடமாடியது. அங்கிருந்து விளை பயிர்களை மிதித்து நாசப்படுத்தியதை பார்த்த பக்தர்கள் மற்றும் பூசாரி, அதை துரத்த முயற்சித்தனர். ஆனால் காட்டுயானைகள் செல்லவில்ைல.
இதையடுத்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறை அதிகாரிகள் பட்டாசுகளை வெடித்து காட்டுயானைகளை மைசூரு மற்றும் பெங்களூரு பகுதியில் உள்ள வனப்பகுதிக்குள் துரத்தி அடித்தனர்.
கிராமமக்கள் கோரிக்கை
இதற்கிடையில் வனத்துறையினரை சுற்றி வளைத்த கிராம மக்கள் காட்டுயானைகள் அட்டகாசத்தால் நிம்மதியாக இருக்க முடியவில்லை. இந்த காட்டுயானைகள் நடமாட்டத்தை தடுக்க நிரந்தர தீர்வு காணவேண்டும். இல்லைெயன்றால் போராட்டம் நடத்தப்படும் என்று கூறினர்.
இதை கேட்ட வனத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் கலைந்து சென்றனர். இதற்கிடையில் 15 நாட்களாக காட்டுயானைகள் அடிக்கடி வந்து செல்வதால், பொதுமக்கள் மத்தியில் உள்ள பீதி இன்னும் நீக்கவில்லை என்று கூறப்படுகிறது.