சித்ரதுர்கா மடாதிபதி மீதான பாலியல் வழக்கு விசாரணையில் அரசு தலையிடவில்லை; போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பேட்டி
சித்ரதுர்கா முருகா மடாதிபதி மீதான பாலியல் வழக்கு விசாரணையில் அரசு தலையிடவில்லை என்று போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா கூறியுள்ளார்.
பெங்களூரு:
போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
போலீசார் விசாரணை
சித்ரதுர்கா முருக மடாதிபதி சிவமூர்த்தி சரணரு மீதான பாலியல் புகாரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளர். இந்த வழக்கில் அரசு தலையிடவில்லை. அவர் இன்னும் சிறையில் தான் உள்ளார். அவருக்கு எதிராக காத்திரி என்பவர் மைசூரு நஜர்பாத் போலீஸ் நிலைத்தில் புகார் அளித்துள்ளார். தனது 2 மகள்களுக்கு மடாதிபதி பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறியுள்ளார். இந்த வழக்கும் சித்ரதுர்காவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்துவார்கள். மடாதிபதி தவறு செய்திருந்தால் உரிய நடவடிக்கை எடுப்பார்கள். ஹிஜாப் வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த விஷயத்தில் ஹிஜாப் தடை நீடிக்கும் என்று பள்ளி கல்வித்துறை மந்திரி கூறியுள்ளார். அதன்படி சட்டம்-ஒழுங்கை காப்பாற்றும் பணிகளை போலீஸ் துறை செய்யும்.
மதமாற்ற தடை சட்டம்
மலவள்ளியில் சிறுமி மீதான பாலியல் புகார் குறித்த வழக்கில் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டுள்ளேன். பெங்களூருவில் இந்து இளைஞர் ஒருவரை மசூதிக்கு அழைத்து சென்று மதமாற்றம் செய்துள்ளனர். இந்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒரு முன்னாள் கவுன்சிலரும் உள்ளார்.
மதமாற்ற தடை சட்டம் அமலுக்கு வந்த பிறகு முதல் முறையாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் போலீசார் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பார்கள். பெல்தங்கடி எம்.எல்.ஏ.வை தாக்க முயற்சி நடைபெற்றுள்ளது. இந்த முயற்சியில் ஈடுபட்டவர்களை கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
இவ்வாறு அரக ஞானேந்திரா கூறினார்.