'கோமா நிலையில் மத்திய அரசு' - ப. சிதம்பரம் விமர்சனம்


கோமா நிலையில் மத்திய அரசு -   ப. சிதம்பரம் விமர்சனம்
x

கோமா நிலைக்கு மத்திய அரசு சென்று விட்டது, மணிப்பூர் மாநில அரசு முற்றிலும் நிலைகுலைந்து போய் உள்ளதாக முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

புதுடெல்லி,

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் கடந்த 2 மாதங்களுக்கு மேலாக வன்முறை நீடித்து வருகிறது. அங்கு பெரும்பான்மை சமூகமாக உள்ள மைதேயி சமூகத்தினர் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து சலுகைகள் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு பழங்குடி சமூகமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள நாகா, குகி ஆகிய சிறுபான்மை பழங்குடியின சமூகங்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவர்கள் நடத்திய பேரணியின்போது, வன்முறை வெடித்தது. அது அம்மாநிலம் முழுவதும் பரவி, மணிப்பூர் முழுவதுமே கலவர பூமியாக காட்சியளிக்கிறது.

மணிப்பூர் வன்முறையில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பு முகாம்களில் தஞ்சமடைந்துள்ளனர். ஏராளமானோர் மணிப்பூரை விட்டு காலி செய்துள்ளனர். மணிப்பூர் விவகாரம் குறித்து நாடாளுமன்ற இரு அவைகளிலும் விவாதிக்க வேண்டும் எனவும், பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், ராஜஸ்தான் மாநில சட்ட-ஒழுங்கு, மேற்குவங்காள மாநில பிரச்சினைகளை பாஜகவினர் கையில் எடுத்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை விமர்சித்து வருகின்றனர். ஆனால், இது வன்முறையால் பாதிக்கப்பட்டுள்ள மணிப்பூரின் நிலைமை குறித்த விவாதத்தைத் தவிர்ப்பதற்கான திசை திருப்பும் தந்திரம் என்று எதிர் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

இந்தநிலையில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம், வடகிழக்கு மாநிலமான மணிப்பூர் பாஜக அரசு வீழ்ச்சி அடைந்து விட்டதாகவும், மத்திய பாஜக அரசு கோமாவில் உள்ளதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில்,

பீகார், மேற்கு வங்காளம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை ஒப்புக்கொள்வோம். ஆனால், மணிப்பூரில் தொடரும் இடைவிடாத வன்முறைக்கு, பிற மாநில பிரச்சினைகளில் இருந்து எப்படி பரிகாரம் தேடிக் கொள்ள முடியும்? எப்படி அதனை மன்னிக்க முடியும்? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், பீகார், மேற்கு வங்கம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் கடுமையான நடவடிக்கை தேவைப்பட்டால், மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்துங்கள், ஆனால் மணிப்பூரில் நடக்கும் காட்டுமிராண்டித்தனத்தை மன்னிக்க முடியாது எனவும், மணிப்பூர் பாஜக அரசு வீழ்ச்சியடைந்து விட்டது எனவும், மத்திய பாஜக அரசு கோமாவில் உள்ளதாகவும் ப.சிதம்பரம் காட்டமாக பதிவிட்டுள்ளார்.


Next Story