விவசாயியிடம் ரூ.60 ஆயிரம் அபேஸ்; மர்ம நபருக்கு வலைவீச்சு


விவசாயியிடம் ரூ.60 ஆயிரம் அபேஸ்; மர்ம நபருக்கு வலைவீச்சு
x

கடன் வழங்குவதாக கூறி விவசாயியிடம் ரூ.60 ஆயிரம் மோசடி செய்த மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.

சிவமொக்கா;

சிவமொக்கா மாவட்டம் சாகர் தாலுகா தடகளலே கிராமத்தை சேர்ந்தவர் மகேஷ். விவசாயி. இவர் விவசாயத்தில் போதிய லாபம் இல்லாததால், வியாபாரம் செய்ய முடிவு எடுத்தார். இதற்கிடையே அவரது செல்போன் எண்ணுக்கு தனியார் நிதி நிறுவனம் பெயரில் வியாபாரம் செய்ய கடன் வழங்குவதாக கூறி குறுந்தகவல் ஒன்று வந்துள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டிருந்த செல்போன் எண்ணை மகேஷ் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது எதிர்முனையில் பேசிய மர்மநபர் வியாபாரம் செய்வதற்கு கடன் வழங்க வங்கிக்கணக்கு, ஏ.டி.எம்.கார்டு உள்ளிட்ட விவரங்களை தெரிவிக்கும்படி கூறியுள்ளார். இதை உண்மையென நம்பி மகேஷ் தனது வங்கி கணக்கு, ஏ.டி.எம்.கார்டு விவரங்களை கூறியுள்ளார்.

இதையடுத்து சிறிது நேரத்தில் அவரது வங்கி கணக்கில் இருந்து பல்வேறு தவணைகளில் ரூ.60 ஆயிரம் வரை எடுக்கப்பட்டதாக குறுந்தகவல் வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி, செல்போன் மூலம் மர்மநபரை தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

அப்போது தான் மர்மநபர் கடன் தருவதாக கூறி பணமோசடி செய்ததை உணர்ந்தார். இதுகுறித்து அவர் அளித்த புகாரின் பேரில் சாகர் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story