சிவசேனா கட்சி, சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கூலிப்படை போல செயல்பட்டுள்ளது.. சாம்னாவில் விமர்சனம்
சிவசேனா கட்சி, சின்னம் விவகாரத்தில் தேர்தல் ஆணையம் மத்திய அரசின் கூலிப்படை போல செயல்பட் டுள்ளதாக சாம்னா பத்திரிகையில் கடுமையாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
மும்பை, -
சுப்ரீம் கோர்ட்டு ஒரே நம்பிக்கை
மராட்டியத்தில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே தரப்பு தான் உண்மையான சிவசேனா என தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது. இதையடுத்து உத்தவ் தாக்கரே தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து வருகிறார். தேர்தல் ஆணையம் பிரதமர் மோடியின் அடிமை என அவர் கூறியிருந்தார்.
இந்தநிலையில் உத்தவ் தாக்கரே அவரது கட்சியின் அதிகாரப்பூர்வ சாம்னா பத்திரிகையிலும் தேர்தல் ஆணையத்தை கடுமையாக விமர்சித்து உள்ளார். இது தொடர்பாக சாம்னாவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
சுப்ரீம் கோர்ட்டு மட்டுமே தற்போது நாட்டின் ஒரே நம்பிக்கையாக உள்ளது. இல்லையெனில் அரசியல் அமைப்பு நிறுவனங்கள் உள்பட எல்லா முகமைகளும் மத்திய அரசின் அடிமையாக மாறியிருக்கும்.
இந்திய தேர்தல் கமிஷனரை மத்திய அரசு நேரடியாக தேர்வு செய்யாமல் கமிட்டி மூலம் தேர்வு செய்ய வேண்டும் என்ற உத்தரவு மூலம் சுப்ரீம் கோர்ட்டு ஜனநாயகத்தை காப்பாற்றி உள்ளது.
கூலிப்படை போல செயல்படுகிறது
40 எம்.எல்.ஏ.க்கள் சென்றதற்காக ஒட்டுமொத்த சிவசேனா, வில், அம்பு சின்னத்தை துரோகிகளின் கையில் கொடுத்தது அநியாயம். ஜனநாயகம் கொலை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தேர்தல் ஆணையம் தனக்கு மூளையில்லை என்பதை காட்டி உள்ளது. தங்கள் அரசியல் எஜமானர்களுக்காக சிவசேனா விவகாரத்தில் தேர்தல் ஆணையம் கூலிப்படை போல செயல்பட்டுள்ளது. அது மத்திய ஆட்சியாளர்களின் காலடியில் முதுகெலும்பு இல்லாத பிராணி போல ஊர்ந்து கொண்டு இருக்கிறது.
எனினும் தேர்தல் ஆணைய கமிஷனர் கமிட்டி மூலம் ேதா்வு செய்யப்பட வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு மூலம் எல்லாம் தெளிவாகி உள்ளது. தேர்தல் ஆணையத்தின் முடிவு எடுக்கும் செயல்பாடுகள் நியாயமாக இல்லை. மத்திய அரசு அரசியல் அமைப்புபடி செயல்பட வேண்டிய முகமைகளுக்கு தங்கள் கொள்கையுடன் ஒத்துப்போகும் நபர்களை தலைவர்களாக நியமிக்கிறது. இதுவும் ஒரு தனியார்மயமாக்கல் தான். சுப்ரீம்கோர்ட் இந்த முறை அவர்களின் தைரியத்தை காட்டி உள்ளது. நாடு சுப்ரீம் கோர்ட்டுக்கு நன்றி கடன்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.