டி.கே.சிவக்குமாரின் ஹெலிகாப்டரில் மோதிய கழுகும்...


டி.கே.சிவக்குமாரின் ஹெலிகாப்டரில் மோதிய கழுகும்...
x

சித்தராமையாவின் கார் மீது அமர்ந்த காகமும், டி.கே.சிவக்குமாரின் ஹெலிகாப்டரில் மோதிய கழுகு சம்பவத்துக்கும் ஒற்றுமை இருப்பதாகவும், இதனால் தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவு ஏற்படுமா என விவாதம் அனல் பறக்கிறது.

பெங்களூரு:-

பஜ்ரங்தள அமைப்புக்கு தடை

கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி காங்கிரஸ் கட்சி நேற்று முன்தினம் தங்களது வாக்குறுதிகள் அடங்கிய தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில் பஜ்ரங்தள அமைப்பு மற்றும் பி.எப்.ஐ. அமைப்புகளை தடை செய்வோம் என அறிவித்துள்ளது. இதற்காக பஜ்ரங்தள அமைப்புக்கு தடை விதிக்கப்படும் என்ற அறிவிப்புக்கு பா.ஜனதா, இந்து அமைப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருவதுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த அறிவிப்பு வெளியான சில மணி துளிகளில் கர்நாடக காங்கிரஸ் கட்சி தலைவர் டி.கே.சிவக்குமார் பெங்களூரு ஜக்கூர் விமான நிலையத்தில் இருந்து கோலார் மாவட்டம் முல்பாகலில் தேர்தல் பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் புறப்பட்டு சென்றார்.

ஹெலிகாப்டரில் மோதிய கழுகு

வானில் ஹெலிகாப்டர் பறந்துகொண்டிருந்த சமயத்தில், டி.கே.சிவக்குமார் ஒரு தனியார் தொலைக்காட்சி சேனலுக்கு பேட்டி அளித்தப்படி இருந்தார். அந்தசமயத்தில் கழுகு ஹெலிகாப்டரின் கண்ணாடியில் பலமாக மோதியது. இதில் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கி டி.கே.சிவக்குமார், நிருபர், கேமராமேன் மீது விழுந்தது. இதில் நிருபர் லேசான காயமடைந்தார்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து பைலட் அவசரம் அவசரமாக ஹெலிகாப்டரை எச்.ஏ.எல். விமானநிலையத்தில் தரையிறக்கினார். இதனால் டி.கே.சிவக்குமார் உள்பட அனைவரும் பத்திரமாக உயிர் தப்பினர். இந்த நிகழ்வை பா.ஜனதாவினர், இந்து அமைப்பினர், காங்கிரஸ் கட்சி பஜ்ரங்தள அமைப்பை தடை செய்வோம் என கூறியதால் ராமர்-அனுமரின் கோபத்தால் டி.கே.சிவக்குமாரின் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியதாகவும், இந்த அறிகுறி வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைவதற்கானது எனவும் கருத்து கூறி வருகிறார்கள். இந்த விவகாரம் சமூகவலைத்தளங்களில் பெரும் விவாதப்பொருளாகி வருகிறது.

சித்தராமையா காரில் காகம்

இந்த நிலையில் டி.கே.சிவக்குமார் பயணித்த ஹெலிகாப்டரில் கழுகு மோதியதற்கும், கடந்த 2016-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்த போது சித்தராமையாவின் காரில் காகம் அமர்ந்திருந்த சம்பவத்தையும் ஒப்பிட்டும் கருத்துகள் சமூகவலைத்தளங்களை ஆக்கிரமித்து வருகின்றன. அதாவது 2016-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்த சித்தராமையாவின் காரின் முன்பகுதியில் காகம் ஒன்று அமர்ந்திருந்தது. இது அபசகுணம் என்றும், சித்தராமையா அடுத்த தேர்தலில் தோல்வி அடைவார் என்றும் கூறப்பட்டது. மூடநம்பிக்கைக்கு எதிரானவர் என தன்னை அடையாளப்படுத்தி வரும் சித்தராமையா தொழில்நுட்ப கோளாறை காரணம் காட்டி அந்த காரை மாற்றினார். இதைத்தொடர்ந்து நடந்த 2018-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அவர் சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்தார். அவர் போட்டியிட்ட மற்றொரு தொகுதியான பாதாமியில் சில ஆயிரம் வாக்குகளில் வெற்றி பெற்றார்.

13-ந்தேதி விடை கிடைக்கும்

மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 80 இடங்கள் மட்டுமே கிடைத்து ஆட்சியை இழந்தது. நிலைமை இவ்வாறு இருப்பதால், சித்தராமையாவின் காரில் காகம் அமர்ந்தது போல் தற்போது டி.கே.சிவக்குமாரின் ஹெலிகாப்டரில் கழுகு மோதியது வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரசுக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என பலரும் கருத்துக்களை கூறிவருகிறார்கள். எது எப்படியோ வருகிற 13-ந்தேதி இதற்கான விடை கிடைத்துவிடும்.


Next Story