விமானங்களில் பயணிகளுக்கு நல்ல இருக்கைகளை வழங்க தவறினால் கடும் நடவடிக்கை - விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை
விமானங்களில் உள்ள இருக்கைகள் மற்றும் பிற கேபின் உள்கட்டமைப்பு அம்சங்களை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆய்வு செய்ததில் பல இடங்களில் உடைந்த அல்லது பயன்படுத்த முடியாத இருக்கைகள் இருந்தன என்பது தெரிய வந்தது.
புதுடெல்லி,
விமானங்களில் வசதிக் குறைவாக உள்ள இருக்கைகள் பயணிகளுக்கு வழங்கப்படுவதாக எழுந்த புகாரில், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விமான நிறுவனங்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், விமானங்களில் உள்ள இருக்கைகள் மற்றும் பிற கேபின் உள்கட்டமைப்பு அம்சங்களை விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ஆய்வு செய்தது. அதில் பல இடங்களில் உடைந்த அல்லது பயன்படுத்த முடியாத இருக்கைகள் இருந்தன என்பது தெரிய வந்தது.
இந்நிலையில், டிஜிசிஏ இன்று வெளியிட்ட அறிக்கையில், சில விமான நிறுவனங்கள், பயணிகளுக்கு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ள இருக்கைகளை வழங்குவதாக டிஜிசிஏ தெரிவித்துள்ளது. இது தொடர்பாக விமான நிறுவனங்களுக்கு வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டதாவது;-
விமான விதி, 1937 இன் விதி 53 இன் படி, விமான இருக்கை உட்பட அனைத்து பொருட்களும் அங்கீகரிக்கப்பட்ட வடிவமைப்பு விவரக் குறிப்புகளுக்கு இணங்க வேண்டும்.
மேற்கண்ட திட்டமிடப்பட்ட வடிவமைப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்யத் தவறுவது, தரத்தை குறைக்கிறது. இந்த நடைமுறையானது பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்துவது மட்டுமின்றி, பயணிகளின் பாதுகாப்பு குறித்த தீவிரமான கவலையையும் ஏற்படுத்துகிறது.
ஒரு விமானத்தில் நல்ல நிலையில் உள்ள இருக்கைகள் நிரம்பிவிட்டால், அதற்கு அப்பால் பயணிகளை முன்பதிவு செய்ய விமான நிறுவனங்கள் அனுமதிக்க கூடாது என்பதை உறுதி செய்ய இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.