மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் மீது சரியாக விசாரணை நடத்த வில்லை; போலீசாருக்கு, கர்நாடக ஐகோர்ட்டு கண்டனம்
மனைவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் மீது கூடுதல் விசாரணை நடத்த போலீசாருக்கு, கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
மனைவிக்கு பாலியல் தொல்லை
பெங்களூரு நகரில் ஒரு தம்பதி வசித்து வந்தனர். அந்த பெண்ணின் கணவர் கம்ப்யூட்டர் என்ஜினீயர் ஆவார். இவர்கள் கடந்த 2013-ம் ஆண்டு மும்பையில் உள்ள ஐ.ஐ.டி.யில் படிக்கும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணத்திற்கு பின்பு அந்த பெண்ணும், கம்ப்யூட்டர் என்ஜினீயரும் பெங்களூருவில் வசித்து வந்தனர்.
இதற்கிடையில், திருமணமான 3 மாதத்திலேயே அந்த பெண்ணுக்கு கம்ப்யூட்டர் என்ஜினீயர், பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. அத்துடன் பெண்ணை ஆபாசமாக படம் எடுத்து அதனை நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்புவதாக கம்ப்யூட்டர் என்ஜினீயர் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
தந்தைக்கு ஆபாச படங்கள்
இதையடுத்து, அந்த பெண் தனது கணவருடன் வாழ பிடிக்காமல் பிரிந்து சென்றிருந்தார். 2 வீட்டு பெற்றோரும் பெண்ணையும், கம்ப்யூட்டர் என்ஜினீயரையும் சேர்த்து வைத்திருந்தனர். ஆனாலும் கடந்த 2016-ம் ஆண்டும் மீண்டும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததுடன் ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியதாக தெரிகிறது. இதனால் அந்த பெண் கணவருடன் சேர்ந்து வாழ பிடிக்காமல் பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.
தனது கணவர் மீது பெங்களூரு போலீசில் பெண் புகார் அளித்திருந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கம்ப்யூட்டர் என்ஜினீயரை கைது செய்திருந்தனர். பின்னர் அவர் விடுக்கப்பட்டு இருந்தார். இதற்கிடையில், தான் கொடுத்த புகாரின் பேரில் கணவர் மீது போலீசார் சரியாக விசாரணை நடத்தி, கோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்யவில்லை, தனது ஆபாச புகைப்படங்களை தந்தை மற்றும் நண்பர்களுக்கு கணவர் அனுப்பி வைத்துள்ளார் என்று கர்நாடக ஐகோர்ட்டில் அந்த பெண் வழக்கு தொடர்ந்தார்.
கூடுதல் விசாரணைக்கு உத்தரவு
இந்த வழக்கு கர்நாடக ஐகோர்ட்டு நீதிபதி நாகபிரசன்னா தலைமையில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழக்கு விசாரணை நிறைவு பெற்றிருந்தது. இதையடுத்து, நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது பெண்ணுக்கு விசித்திரமான பாலியல் தொல்லை கொடுத்ததுடன், மனைவியின் ஆபாச புகைப்படத்தை தந்தைக்கும், நண்பர்களுக்கும் அனுப்பி வைத்திருப்பது ஏற்று கொள்ள முடியாது.
இந்த வழக்கில் கம்ப்யூட்டர் என்ஜினீயர் மீது போலீசார் சரியாக விசாரணை நடத்தி, சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பது மேல்நோட்டமாக தெரியவருகிறது. அதனால் இந்த வழக்கு குறித்து கம்ப்யூட்டர் என்ஜினீயர் மீது கூடுதல் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு நீதிபதி நாகபிரசன்னா உத்தரவிட்டுள்ளார்.