வாளி தண்ணீரில் தவறி விழுந்து குழந்தை பரிதாப சாவு
விளையாடி கொண்டிருந்தபோது வாளி தண்ணீரில் தவறி விழுந்து குழந்தை பரிதாப உயிரிழந்தான்.
சிக்கமகளூரு;
சித்ரதுர்கா மாவட்டம் மொலகால்மூரு தாலுகா ஹொசஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிபொம்மையா. இவருக்கு திருமணம் ஆகி மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு மோகன்(வயது 3) என்ற மகன் இருந்தான். இந்த நிலையில் வழக்கம்போல் ஹரிபொம்மையா வேலைக்கு சென்றுவிட்டார்.
அவரது மனைவி சமையலறையில் உணவு சமைத்து கொண்டிருந்தார். இதில் குழந்தை மோகன் வீட்டின் பின்பகுதியில் விளையாடி கொண்டிருந்தான். அப்போது குழந்தை மோகன், தண்ணீருடன் இருந்த வாளி அருேக வந்து விளையாடியதாக கூறப்படுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் எதிர்பாராதவிதமாக குழந்தை தவறி வாளியில் தலைகீழாக விழுந்து தண்ணீரில் மூழ்கி இறந்தது. சிறிதுநேரம் கழித்து மகனை தேடி தாய் வந்துள்ளார். அப்போது அவர், தனது குழந்தை மோகன் வாளி தண்ணீரில் மூழ்கி இறந்து கிடப்பதை பாா்த்து கதறி அழுதார்.
இதுபற்றி அறிந்த அக்கம்பக்கத்தினர் மொலகால்மூரு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.