காவிரி பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் மந்திரி மதுபங்காரப்பா பேட்டி
காவிரி பிரச்சினைக்கு மத்திய அரசு தீர்வு காண வேண்டும் மந்திரி மதுபங்காரப்பா கூறினார்.
சித்ரதுர்கா-
சித்ரதுர்கா மாவட்டத்திற்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக பள்ளி கல்வித்துறை மந்திரி மதுபங்காரப்பா வந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு எதிர்பார்த்த அளவு பெய்யவில்லை.
இதனால் மாநிலத்தில் உள்ள அணைகள் நிரம்பாமல் உள்ளது. ஆனால் காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டதால் தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்தநிலை ஏற்பட்டால் கர்நாடக மக்களுக்கு குடிப்பதற்கே தண்ணீர் இல்லாமல் போய்விடும். காவிரி பிரச்சினை தொடர்பாக மத்திய அரசு தீர்வு காண வேண்டும்.
இதுசம்பந்தமாக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் ஆகியோர் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு மந்திரி சபை ஒப்புதல் அளிக்கும். காவிரி பிரச்சினை ெதாடர்பாக எதிர்க்கட்சிகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். இதன் மூலம் தான் நாம் வெற்றி பெற முடியும்.
கர்நாடகத்தில் பள்ளி கல்வித்துறையில் 53 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக இருந்த நிலையில் 43 ஆயிரம் ஒப்பந்த ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 13 ஆயிரம் பணியிடங்கள் நியமிப்பதற்கு கோர்ட்டு அனுமதி கேட்டுள்ளோம். மேலும் கர்நாடகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் வளர்ச்சிப் பணி செய்து கொடுக்க மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.