வங்காளதேசம் உள்ளிட்ட 4 நாடுகளுக்கு வெங்காயம் ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி
வங்காளதேசத்துக்கு 50,000 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி,
உலகின் இரண்டாவது பெரிய வெங்காய ஏற்றுமதி நாடான இந்தியா, உள்நாட்டு விலை உயர்வு மற்றும் தட்டுப்பாடு காரணமாக மார்ச் 2024 வரை வெங்காயம் ஏற்றுமதி செய்ய கடந்த ஆண்டு தடை விதித்தது. இதனால் அண்டை நாடுகளில் வெங்காயம் விலை உயர்ந்தது.
இந்த நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் வங்கதேசம், மொரீஷியஸ், பக்ரைன் மற்றும் பூடான் ஆகிய 4 நாடுகளுக்கு 54,760 டன் வெங்காயத்தை ஏற்றுமதி செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
வங்காளதேசத்திற்கு 50,000 டன் வெங்காயம், மொரீஷியசுக்கு 1,200 டன், பக்ரைனுக்கு 3,000 டன் மற்றும் பூட்டானுக்கு 560 டன் வெங்காயம் ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார செயலாளர் ரோஹித் குமார் சிங் தெரிவித்துள்ளார்.
அடுத்த மாதம் 31ம் தேதி வரை இந்த அளவு ஏற்றுமதி செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்றும், அதற்கான வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் தெரிவித்தார்.