காரசார விவாதமின்றி முடிந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம்
நேற்று நடந்த காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் காரசார விவாதமின்றி முடிந்தது.
புதுடெல்லி,
காவிரி நதிநீர் பங்கிட்டு விவகாரங்களை தீர்த்து வைக்கும் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 20-வது கூட்டம் டெல்லியில் உள்ள மத்திய நீர் ஆணையத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தார் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் தமிழ்நாடு நீர்வள ஆதாரத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்பக்குழு தலைவர் சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதைப்போல கேரள அதிகாரிகளும் நேரில் பங்கேற்றனர். ஆனால் கர்நாடகம் மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகள் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர். கூட்டம் பகல் 11.45 மணிக்கு தொடங்கி 1:30 மணி வரை நடைபெற்றது.
கூட்டத்தில் பருவமழை மற்றும் பாசன ஆண்டு விரைவில் தொடங்க இருப்பது பற்றி பேசப்பட்டது. மேலும் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை அளவு, நீர்வரத்து, நீர் இருப்பு தரவுகள் உள்ளிட்ட பிற அம்சங்கள் குறித்தும், பாசன காலத்துக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது
மேகதாது அணை விவகாரம் தொடர்பான மனுக்கள் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ள நிலையில், அதுகுறித்து விவாதிக்க கூடாது என்ற தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று, மேகதாது அணை தொடர்பாக கர்நாடகம் தரப்பில் விவாதிக்கப்படவில்லை.
அதுபோல கர்நாடக அரசு தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை விடுவித்ததன் காரணத்தால், தமிழ்நாடு சார்பிலும் அது தொடர்பான எந்த கோரிக்கையும் வைக்கப்படவில்லை. இதனால் காரசார விவாதமின்றி கூட்டம் நடந்து முடிந்தது.