சரக்கு ஆட்டோ பாசன கால்வாய்க்குள் பாய்ந்தது; 3 பெண் தொழிலாளிகள் பலி
பல்லாரி அருகே சரக்கு ஆட்டோ பாசன கால்வாய்க்குள் பாயந்த விபத்தில் 3 பெண் தொழிலாளிகள் பலியானார்கள். மேலும் 3 பேரின் கதி என்ன என்பது தெரியவில்லை.
பல்லாரி:
விவசாய தொழிலாளர்கள்
பல்லாரி மாவட்டம் கனகல்லு கிராமத்தை சேர்ந்த பெண்கள் விவசாய கூலி வேலைக்கு சரக்கு ஆட்டோவில் சென்று வருவது வழக்கம்.
அதுபோல் நேற்று காலை கனகல்லு கிராமத்தை சேர்ந்த நிங்கம்மா, துர்கம்மா, புஷ்பாவதி, குடதினி ஹுலிகேம்மா, லட்சுமி, நாகரத்னம்மா, இடிகார பிம்மா, டமுரி ஈரம்மா, ஹேமாவதி, ஷில்பா ஆகியோர் மகேஷ் என்பவரின் சரக்கு ஆட்டோவில் விவசாய கூலி வேலைக்காக ஒரு தோட்டத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
சரக்கு ஆட்டோ கால்வாய்க்குள் பாய்ந்தது அப்போது துங்கபத்ரா மேல் அணை பாசன கால்வாய் ஒட்டிய சாலையில் வேகமாக வந்தது. அந்த சமயத்தில் சாலையில் கிடந்த கல் மீது சக்கரம் ஏறியதில் நிலைத்தடுமாறி சாலையோரம் இருந்த கால்வாய்க்குள் ஆட்டோ கவிழ்ந்தது.
தற்போது துங்காபத்ரா அணையில் பாசனத்திற்காக அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ள நீரில் ஆட்டோ மூழ்கி அதில் இருந்தவர்கள் தத்தளித்தனர்.
3 பெண்கள் பலி
இந்த விபத்தை பார்த்த அப்பகுதி மக்கள் விரைந்து சென்று ஆட்டோவுடன் கால்வாயில் மூழ்கியவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்களும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது இடிகாரா பீமா, டமுரி ஈரம்மா, ஹமாவதி, ஷில்பா, ஆட்டோ டிரைவர் மகேஷ் ஆகியோர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
மேலும் நிங்கம்மா, துர்கம்மா, புஷ்பாவதி ஆகிய 3 பேரும் நீரிில் மூழ்கி பிணமாக கிடந்தனர். அவர்கள் 3 பேரின் உடல்களும் மீட்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
மூவரின் கதி என்ன?
மேலும் குடதினி ஹுலிகெம்மா, லட்சுமி, நாகரத்னம்மா ஆகியோரின் கதி என்ன என்பது தெரியவில்லை. அவர்கள் கால்வாய் நீரில் அடித்தச்செல்லப்பட்டு இருக்கலாம் என கருதப்படுகிறது. அவர்களை தேடும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.