எனது கார் மீது முட்டை வீசிய பா.ஜனதாவினர் கோழைகள்; சித்தராமையா பேட்டி


எனது கார் மீது முட்டை வீசிய பா.ஜனதாவினர் கோழைகள்;   சித்தராமையா பேட்டி
x

எனது கார் மீது முட்டை வீசிய பா.ஜனதாவினர் கோழைகள் என்று சித்தராமையா கூறியுள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா குடகில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

உடனடி நிவாரணம்

குடகு மாவட்டத்தில் இயல்பைவிட அதிக மழை பெய்துள்ளது. நான் இன்று இந்த மாவட்டத்தில் நேரில் ஆய்வு செய்தேன். இந்த பகுதியில் மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த பயிர்கள் குறித்து அரசு இன்னும் ஆய்வு நடத்தவில்லை. வருவாய்த்துறை அதிகாரிகள், தற்போது தான் ஆய்வு நடைபெற்று வருவதாக கூறியுள்ளனர். வெள்ளத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் அதன் மதிப்பு குறித்து எந்த தகவலும் தெரியவில்லை.

இங்கு மட்டும் சுமார் 35 ஆயிரம் வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அதில் 10 ஆயிரம் வீடுகள் முழுமையாக சேதம் அடைந்துள்ளன. பயஸ்வினி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட வேண்டும் என்று இந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் பாலம் கட்ட அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.

காங்கிரஸ் வெற்றி

வருகிற சட்டசபை தேர்தலில் குடகு மாவட்டத்தில் உள்ள 2 தொகுதிகளிலும் காங்கிரஸ் வெற்றி பெறும். அதனால் ஏமாற்றம் அடைந்துள்ள பா.ஜனதாவினர் எனது கார் மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் கோழைகள். காங்கிரசாரும் இவ்வாறு தாக்குதல் நடத்தினால் முதல்-மந்திரி, மந்திரிகள் யாரும் வெளியில் நடமாட முடியாது. காங்கிரஸ் தொண்டர்களுக்கு இந்த பலம் உள்ளது.

பா.ஜனதாவினர் பணம் கொடுத்து ஆட்களை அழைத்து எனக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். கர்நாடகத்தில் அரசே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் மக்களின் கவனத்தை திசை திருப்பும் நோக்கத்தில் சிறுபிள்ளைத்தனமாக போராட்டம் நடத்துகிறார்கள். கர்நாடகத்தில் நடைபெற்ற அரசு திட்ட வளர்ச்சி பணிகள் தரம் குறைந்தவையாக உள்ளன. அதில் 40 சதவீத கமிஷன் பெறப்பட்டுள்ளது.

நிலச்சரிவு

குடகு மாவட்டத்தில் அடிக்கடி நிலச்சரிவு ஏற்படுகிறது. இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வருகிற டிசம்பர் மாதத்திற்குள் குடகு மாவட்டத்தில் உள்ள சட்டசபை தொகுதிகளில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பளார்கள் யார் என்பது தெரியவரும். சிவமொக்காவில் நடந்த சம்பவத்திற்கு ஈசுவரப்பாவே காரணம். சட்டசபை தொகுதியில் நான் போட்டியிடுவது உறுதி. ஆனால் எந்த தொகுதி என்று இன்னும் முடிவு செய்யவில்லை.

இவ்வாறு சித்தராமையா கூறினார்.


Next Story