'அரசு செயல்படவில்லை என கூறிய ஆடியோ பதிவு என்னுடையது தான்'; மந்திரி மாதுசாமி ஒப்புதல்


அரசு செயல்படவில்லை என கூறிய ஆடியோ பதிவு என்னுடையது தான்; மந்திரி மாதுசாமி ஒப்புதல்
x

அரசு செயல்படவில்லை என கூறிய ஆடியோ பதிவு தன்னுடையது தான் என்று மந்திரி மாதுசாமி ஒப்பு கொண்டுள்ளார்.

பெங்களூரு:

பா.ஜனதா அரசுக்கு நெருக்கடி

சட்டத்துறை மந்திரி மாதுசாமி, சமூக ஆர்வலர் ஒருவருடன் செல்போனில் பேசிய ஆடியோ சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதில் மாதுசாமி, 'அரசு செயல்படவில்லை, நாங்கள் 'மேனேஜ்' செய்து கொண்டிருக்கிறோம். நான் கேட்டுக்கொண்ட ஒரு வேலையையே மந்திரி எஸ்.டி.சோமசேகர் செய்யவிலை. என்ன செய்வது' என்று குறிப்பிட்டுள்ளார்.

மாதுசாமியின் இந்த கருத்தை முன்வைத்து எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராக குறை கூறி வருகின்றன. இதனால் ஆளும் பா.ஜனதா அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மாதுசாமி தவறான அர்த்தத்தில் கருத்து கூறவில்லை என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை விளக்கம் அளித்து சமாளிக்க முயற்சி செய்துள்ளார். இந்த நிலையில் மந்திரி மாதுசாமி, தனது குரல் இடம் பெற்றுள்ள ஆடியோ பதிவு என்னுடையது தான் என்று ஒப்பு கொண்டுள்ளார்.

எனக்கு புரியவில்லை

இதுகுறித்து அவர் நேற்று துமகூருவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், 'சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் எனது குரல் அடங்கிய ஆடியோ உரையாடல் பதிவு என்னுடையது தான். எதிர்முனையில் பேசிய அந்த நபர் தான் ஒரு விவசாயி என்று கூறி பேசினார். அவர் யார் என்று எனக்கு தெரியாது.

மாவட்ட கூட்டுறவு வங்கியால் தனக்கு அநீதி ஏற்பட்டதாக கூறினார். அழுத்தத்தால் நான் ஏதோ கூறி இருப்பேன். நான் என்ன பேசினேன் என்று தெளிவாக எனக்கு தெரியவில்லை. அந்த ஆடியோ வைரலான பிறகே இந்த விவகாரம் எனக்கு தெரியவந்தது' என்றார்.


Next Story