யுனெஸ்கோ அமைப்புக்கு நன்றி; மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் மெகா பேரணி


யுனெஸ்கோ அமைப்புக்கு நன்றி; மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தலைமையில் மெகா பேரணி
x

துர்கா பூஜையை யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய பட்டியலில் இணைத்ததற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி தலைமையில் இன்று மெகா பேரணி நடைபெற்று வருகிறது.



கொல்கத்தா,



மேற்கு வங்காளத்தில் துர்கா பூஜை பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமுடன் கொண்டாடப்படுவது வழக்கம். இதனை முன்னிட்டு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி, வருகிற செப்டம்பர் 30-ந்தேதி முதல் அக்டோபர் 10-ந்தேதி வரை அரசு விடுமுறை நாட்களாக இருக்கும் என அறிவிப்பு வெளியிட்டார்.

இதேபோன்று, துர்கா பூஜையை முன்னிட்டு அனைத்து பூஜை குழுவினருக்கும் ரூ.60 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு இந்த தொகை ரூ.50 ஆயிரம் ஆக இருந்தது. அரசின் இந்த உதவி தொகை வழங்குவது 3 ஆண்டுகளாக தொடர்கிறது.

மேற்கு வங்காளத்தில் பிரசித்தி பெற்ற துர்கா பூஜையை யுனெஸ்கோ அமைப்பு பாரம்பரிய பட்டியலில் இணைத்து பெருமைப்படுத்தி உள்ளது. இதனை முன்னிட்டு ஜோராசாங்கோ பகுதியில் இருந்து கொல்கத்தாவின் சிவப்பு சாலை வரை, இன்று மெகா பேரணி ஒன்று நடைபெறுகிறது. இதில், யுனேஸ்கோ பிரதிநிதிகளை கவுரவிக்க அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக 17 அம்சங்கள் கொண்ட வழிகாட்டு நெறிமுறைகள் தகவல் மற்றும் கலாசார விவகார துறை சார்பில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த வண்ணமய பேரணியில் அனைத்து மாவட்டத்தினரும் பங்கு பெற வேண்டும் என்று அரசு உத்தரவிட்டு உள்ளது.

இந்த மெகா பேரணியில் கருப்பு குடை அல்லது கருப்பு நிறம் சார்ந்த எந்த பொருளும் உபயோகிக்கப்பட கூடாது என்றும் வழிகாட்டு நெறிமுறையில் குறிப்பிடப்பட்டு உள்ளது. இதில் முக்கிய விசயங்களில் ஒன்றாக, லகிர் பந்தர் எனப்படும் அரசின் திட்டங்களில் ஒன்றான ஒவ்வொரு பெண்ணுக்கும் மாதாந்திர பணம் வழங்குவதும் பேரணியில் நடைபெறும்.

இதன்படி, பணம் பெறும் 500 பெண்களும் இந்த பேரணியில் பங்கேற்கின்றனர். மகளிர் சுய உதவி குழுவினர், பள்ளி மாணவ மாணவியர் உள்ளிட்டோரும் யுனெஸ்கோ அமைப்புக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் பேரணியில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.




Next Story