சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத்திற்கு அமலாக்கத்துறை அவகாசம்- ஜூலை 1 ஆம் தேதி ஆஜராக சம்மன்
மத்தியில் ஆளும் பாஜக அரசு விசாரணை முகமைகளை எதிர்க்கட்சிகளை மிரட்ட பயன்படுத்துவதாகவும் கடுமையாக சஞ்செய் ராவத் சாடியிருந்தார்.
மும்பை,
சிவசேனா மந்திரி ஏக்நாத் ஷிண்டே, கட்சி தலைமைக்கு எதிராக ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் அசாமில் உள்ள ஓட்டலில் முகாமிட்டு உள்ளார். இதற்கிடையே சிவசேனாவை சேர்ந்த சஞ்சய் ராவத் எம்.பி., முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவுக்கு ஆதரவாகவும், அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராகவும் கடுமையாக பேசி வருகிறார்.
இந்தநிலையில் அமலாக்கத்துறை பத்ரா சால் முறைகேடு வழக்கில் சஞ்சய் ராவத்திற்கு திடீரென சம்மன் அனுப்பியது. இன்று ஆஜராக சம்மன் விடுத்து இருந்தது. ஆனால், ஆவணங்களை ஒருங்கிணைக்க இரண்டு வார அவகாசம் வழங்க வேண்டும் என்று சஞ்செய் ராவத்தின் வழக்கறிஞர்கள் அமலாக்கத்துறையிடம் அவகாசம் கோரினர். இதை ஏற்றுக்கொண்ட அமலாக்கத்துறை வரும் ஜூலை 1 ஆம் தேதி வரை ஆஜர் ஆவதில் இருந்து விலக்கு அளித்து அன்றைய தினம் ஆஜராக வேண்டுமென்று சம்மன் விடுத்துள்ளது.
முன்னதாக நேற்று அமலாக்கத்துறை சம்மன் விடுத்தததும் மிகவும் ஆக்ரோஷமாக பேசிய சஞ்செய் ராவத், அமலாக்கத்துறை முன் ஆஜராகப் போவது இல்லை எனவும் முடிந்தால் தன்னை கைது செய்யுமாறும் சவால் விடுத்து இருந்தார். மேலும், மத்தியில் ஆளும் பாஜக அரசு விசாரணை முகமைகளை எதிர்க்கட்சிகளை மிரட்ட பயன்படுத்துவதாகவும் கடுமையாக சாடியிருந்தார்.
மத்தியில் ஆளும் பாஜக அரசு விசாரணை முகமைகளை எதிர்க்கட்சிகளை மிரட்ட பயன்படுத்துவதாகவும் கடுமையாக சஞ்செய் ராவத் சாடியிருந்தார்.